பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் அச்சத்தால் ஓட்டம் மத்திய அரசு அதிகாரிக்கு கொரோனா பாதிப்பா?

நாகர்கோவில், மார்ச் 18: கேரளாவில் இருந்து காய்ச்சல் காரணமாக விடுமுறையில் ஊருக்கு வந்த, கன்னியாகுமரியை சேர்ந்த மத்திய அரசு அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு என வதந்தி பரவியதால், நள்ளிரவில் மருத்துவ குழுவினர் வந்து பரிசோதனை செய்தனர். கன்னியாகுமரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர், கேரளாவில் மத்திய அரசு துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கன்னியாகுமரி அருகே உள்ள சொந்த ஊரில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் திடீர் காய்ச்சல் காரணமாக விடுமுறையில் அந்த அதிகாரி நேற்று முன் தினம் மாலை ஊருக்கு வந்தார். அக்கம் பக்கத்தினர் கேட்ட போது, தனக்கு இரு நாட்களாக காய்ச்சல் இருப்பதாக சாதாரணமாக தெரிவித்தார். இந்த தகவல் இரவு ஊர் முழுவதும் தெரிய வந்தது. கொரோனா தாக்கி இருப்பதால் தான் அவரை அங்கிருந்து, ஊருக்கு அனுப்பி வைத்து விட்டனர் என வதந்தி பரவியது.

 இதையடுத்து அக்கம் பக்கத்தில் வீடுகளில் இருந்தவர்கள் தங்களது வீடுகளை பூட்டி விட்டு, குழந்தைகளுடன் உறவினர் வீடுகளுக்கு சென்றனர். நள்ளிரவு 11.30 மணியளவில் இந்த தகவல் பரவி, பொதுமக்கள் திரண்டனர். பெரும்பாலானவர்கள் முக கவசம் அணிந்தவாறு அவரது வீட்டு அருகில் நின்று, ஊரை விட்டு செல்லுமாறு கோஷம் எழுப்பினர். இதனால்  பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். எஸ்.பி. நாத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் குமரி மாவட்ட மருத்துவ அதிகாரிகளுடன் பேசினார். இதையடுத்து கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து மருத்துவ குழுவினர் வந்து அந்த அதிகாரியை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்னவே கேரளாவில் பரிசோதனை செய்து, தான் பெற்று இருந்த மருந்துகளை காண்பித்தார்.

அந்த மருந்துகள் அனைத்தும் சாதாரண காய்ச்சலுக்கு உள்ள மருந்து ஆகும். உடனடியாக கேரளாவில் உள்ள மருத்துவ குழுவினரை தொடர்பு கொண்டு குமரி மாவட்ட மருத்துவக்குழுவினர் பேசினர். அப்போது அந்த அதிகாரிக்கு ஏற்கனவே முழு பரிசோதனை முடிந்துவிட்டதாகவும், அவருக்கு சாதாரண காய்ச்சல் தான் என்றும், 2 , 3 நாட்களில் குணம் அடைந்து விடுவார் என்றும் தெரிவித்தனர். இந்த தகவலை மருத்துவ குழுவினர் பொதுமக்களிடம் தெரிவித்தனர். அதன் பின்னரே பரபரப்பு அடங்கியது. இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் நள்ளிரவு 1 மணி வரை மக்கள் தூங்க செல்லாமல் வீதிகளில் நின்று கொண்டு இருந்தனர்.

Related Stories: