திட்டக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

திட்டக்குடி, பிப். 26:  திட்டக்குடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 140 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கடலூர் மாவட்டம் திட்டக்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை அதிகளவில் இருப்பதாகவும், இதில் பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் திட்டக்குடி போலீசார் கடந்த சில நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிகாடு பகுதியை சேர்ந்த நியாஷ்அகமத் (28) என்பவர் திட்டக்குடி-அரியலூர் சாலையில் உள்ள வெள்ளாற்று மேம்பாலம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாகவும், அவரிடமிருந்து அதிகளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கஞ்சா வாங்குவதாகவும் கிடைத்த தகவலையடுத்து நியாஷ்அகமத்தை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். இதில் திட்டக்குடி அடுத்த இளமங்கலத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (25) என்ற நபரும் இவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்வதாகவும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து, அவர்களிடமிருந்து 140 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் திட்டக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: