நிலக்கடலை சாகுபடி வயல் விழா

கடலூர், பிப். 26:  வேளாண்மைத்தொழில் நுட்பம், மேலாண்மை முகமை, வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் கடலூர் வட்டம் விலங்கல்பட்டு கிராமத்தில் விவசாயி நாராயணன் சொட்டுநீர் சாகுபடி பாசனத்துடன் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை வயலில் விவசாயிகள் பங்கேற்ற வயல் விழா நடைபெற்றது. கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் பூவராகன் தலைமை தாங்கினார். விவசாயி நாராயணன் 110 நாள் வயதுடைய சி.ஜி.7 என்ற கொத்து ரக நிலக்கடலை சாகுபடி

செய்துள்ளார். மேலும் பிரதமரின் விவசாய பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் அமைத்து சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தி வருகிறார். இதன் மூலம் பயிரின் வளர்ச்சி நன்றாக இருப்பதுடன் மகசூலும் சிறப்பாக இருக்கிறது.

கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் ஜெயச்சந்திரன் நிலக்கடலையில் சாகுபடி மேற்கொள்ள வேண்டிய உழவியல் முறைகள், விதை நேர்த்தி, களை கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்து விளக்கினார். பயிர் நோயியல் துறை உதவி பேராசிரியர் ரவிச்சந்திரன் நிலக்கடலையில் இலைப்புள்ளி மற்றும் துரு நோய் தாக்குதலுக்கு மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினார்.  இதில் விவசாயிகள் பங்குபெற்றனர். கடலூர் வேளாண்மை அலுவலர்கள் சுஜி, சுகன்யா, உதவி வேளாண்மை அலுவலர் விஜயகுமார் மற்றும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் இளங்கோவன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கண்ணன, அருண்ராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories: