உள்ளாட்சி அமைப்பு வார்டுகள் எல்லை மறுவரையறை கள்ளக்குறிச்சி கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரி கேள்வி

கள்ளக்குறிச்சி, பிப். 26:    கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி அமைப்பு வார்டுகள் எல்லை மறுவரையறை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் ஆட்சியர் (பொறுப்பு) சங்கீதா தலைமையில் நடந்தது. விழுப்புரம் மாவட்ட திட்ட இயக்குநர் மகேந்திரன் முன்னிலை வகித்து பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 412 கிராம ஊராட்சிகளில் அடங்கிய 3162 சிற்றூராட்சி வார்டுகளும், 9 ஊராட்சி ஒன்றியங்களில் 180 வட்டார ஊராட்சி வார்டுகள், 9 ஊராட்சி ஒன்றியங்களில் 19 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 7 பேரூராட்சிகளில் 117 வார்டுகள், கள்ளக்குறிச்சி நகராட்சியில் 21 வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது எனவே இதுகுறித்து தங்களது கருத்துகளை பதிவு செய்யலாம் என்றார்.    அப்போது சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன் பேசியதாவது:வார்டு வரையறையில் பல குறைபாடுகள் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். எனவே வருகிற 5ம்தேதி மீண்டும் ஒரு கருத்து கேட்பு கூட்டம் வைத்துள்ளீர்கள். அதற்குள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ள வார்டு வரையறையை சரி செய்து கொடுக்க வேண்டும். அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் மனுவை பரிசீலனை செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வார்டு வரையில் செய்யப்பட்டுள்ளது. அதுபோதாது.

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் தலா 3 உறுப்பினர்கள் கொண்டு மொத்தம் 27 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களாக அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு அரசின் திட்டங்கள் உடனே சென்று சேர வசதியாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட ஊராட்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பூட்டை, பாவலம் ஊராட்சியை தனி ஊராட்சியாக பிரிக்க வேண்டும்.  ஆலத்தூர், புத்தந்தூர் கிராமத்தை தனி ஊராட்சியாக பிரிக்க வேண்டும்.  தியாகதுருகம் பேரூராட்சியில் ஏற்கனவே இருந்த 14,15 என்ற 2 வார்டுகளின் எண்ணிக்கையை குறைத்து ஒரே வார்டாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே வார்டுகளை பழையபடியே மாற்றி அமைக்க வேண்டும் என்றார்.    

திமுக மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி பேசுகையில், சங்கராபுரம் தாலுகா பகுதியில் உள்ள அ.பாண்டலம் கிராமத்தை கொளத்தூர் கிராமத்துடன் சேர்த்து ஒன்றிய குழு வார்டில் இணைக்கப்பட்டுள்ளது. அதனை பிரித்து ஏற்கனவே உள்ளது போல அ.பாண்டலம் கிராமத்தின் அருகில் உள்ள கொளத்தூர் கிராமத்துடன் சேர்த்து ஒன்றிய குழு வார்டு வரையில் மாற்றியமைக்க வேண்டும். சேந்தமங்கலம் ஊராட்சியை நிர்வாக வசதிக்காக 4 தனி ஊராட்சியாக பிரிக்க வேண்டும். பொதுமக்கள் கோரிக்கையினை பரிசீலனை செய்து வார்டு வரையறை செய்து கொடுக்க வேண்டும் மேலும் பொதுமக்களிடையே கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்றார்.    காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் பேசுகையில், சின்னசேலம் பேரூராட்சி  18 வார்டுகள் கொண்டதாக உள்ளது. அதனை மாற்றி 21 வார்டுகளாக உயர்த்த வேண்டும். சின்னசேலத்தில் 2 மாவட்ட கவுன்சிலர் வார்டு வரையில் உள்ளது. அந்த 2 வார்டுகளையும் பொது வார்டாக மற்றியமைக்க வேண்டும். மேலும் நிர்வாக வசதிக்காக சின்னசேலம் ஒன்றியத்தில் 3 மாவட்ட ஊராட்சி வார்டாக அதிகரிக்க வேண்டும். உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் 21 வார்டாக  அதிகரிக்க வேண்டும் என்றார்.    

 திமுக மாவட்ட பொருளாளர் கென்னடி பேசுகையில் கள்ளக்குறிச்சி நகராட்சியில் 21 வார்டுகள் மட்டுமே உள்ளது. இந்த வார்டுகள் வரையறையில் பல குளறுபடிகள் செய்துள்ளனர். அதாவது ஒரு வார்டில் 800 ஓட்டுகளும் மற்றொறு வார்டில் 3500 ஓட்டுகளும் சேர்த்துள்ளனர். எனவே குளறுபடிகளை சரி செய்து பொதுமக்கள் வசதிக்கேற்றபடி நகராட்சியில் 31 வார்டுகளாக அதிகரிக்க வேண்டும் என்றார்.    இறுதியாக மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சங்கீதா பேசுகையில், மக்கள் பிரதநிதிகள் கருத்துகள் மற்றும் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் கருத்துகள் மற்றும் புகார் மனு பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றார். கூட்டத்தில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் அதிகாரிகளால் பதில் சொல்ல முடியாமல் திணறினர். கள்ளக்குறிச்சி ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ரத்தினமாலா, மாவட்ட ஊராட்சி செயலாளர் செந்தில்வடிவு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு) கண்ணன், கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெங்கடாசலம் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: