மத்திய அரசின் அடையாள அட்டை பெற 21,362 மாற்று திறனாளிகள் குமரியில் விண்ணப்பம் அதிகாரி தகவல்

நாகர்கோவில், பிப்.26 : மாற்று திறனாளிகளுக்கான மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற, குமரி மாவட்டத்தில் 21,362 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று அதிகாரி கூறினார்.நாடு முழுவதும் மாற்று திறனாளிகள் பற்றிய புள்ளி விபரங்களை சேகரிக்கவும், அரசின் திட்டங்களை அவர்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்கும் நோக்கத்திலும் மாற்று திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை  வழங்கும் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் மாற்று திறனாளிகளுக்கு UDID  அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. குமரி மாவட்டத்தில் தற்போது 36,542 மாற்று திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு, மத்திய அரசின் அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன்லைனிலும் இதற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பெறப்படுகிறது. அந்த வகையில்  நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்று திறனாளிகள் நல அலுவலகத்தில் இதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.  மாநகராட்சி அலுவலகத்தில்  நடந்த சிறப்பு முகாமை, மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து ெகாண்டனர்.

இது குறித்து சிவசங்கரன் கூறுகையில், குமரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் இதுவரை 10 ஆயிரத்து 15 மாற்று திறனாளிகள் தங்களது விண்ணப்பத்தை அளித்துள்ளனர். கடந்த 28.1.2020 முதல் நேற்று வரை நடைபெற்ற முகாம்கள் மூலம் 11 ஆயிரத்து 540 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த அடையாள அட்டை மிகவும் முக்கியமான அடையாள அட்டை ஆகும். எனவே அனைவரும் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பம் உள்ளது. பேரூராட்சி செயல் அலுவலரிடம் விண்ணப்பம் உள்ளது. அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் உள்ள இ சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாற்று திறனாளிகளுக்கு விண்ணப்பிக்க பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. எனவே இதுவரை விண்ணப்பம் அளிக்காதவர்களும் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: