வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் நில உடமைதாரர்கள் சொத்துக்களை அரசு நிலம் என தவறாக பதிவேற்றம் சிறப்பு முகாம் நடத்தி சரி செய்ய கோரிக்கை

வலங்கைமான், பிப்.25: வலங்கைமான் பேரூராட்சிப் பகுதிகளில் பல ஆண்டுகளாக நில உடமை தாரர்களிடம் சொந்தமாக உள்ள புஞ்சை நிலங்களை அரசு நிலம் என தவறுதலாக கணினியில் பதிவேற்றம் செய்ததை தாசில்தார் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தி சரிசெய்துதர பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் நத்தம் நிலஉடமை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கடந்த 1983-84 ஆண்டுகளில் நில அளவீடு செய்து மறுவரையறை செய்யப்பட்டது. அப்போது குடியிருப்பு பகுதிகள் மனைகளாகவும் மீதமுள்ள மற்றவை புஞ்சை நிலங்கள் என உட்பிரிவு செய்யப்பட்டது. மேலும் கடந்த 2016ம் ஆண்டு அ பதிவேடு மற்றும் பட்டா போன்றவை மக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதனையடுத்து அ பதிவேடு மற்றும் பட்டா போன்றவை கணினியில் எளிதாக பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டபோது தவறுதலாக வலங்கைமான் வருவாய் கிராமத்தில் மட்டும் சுமார் 80 பேருக்கு மேல் சொந்த பட்டாதாரர்களின் புஞ்சை நிலங்கள் தவறுதாலாக புஞ்சை தரிசு (அரசுநிலம்) என்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக நிலத்தினை விற்பனை செய்யவோ, நிலத்தின் மீது கடன்பெறவே முடியாத நிலை உள்ளது. மேலும் கிராம பதிவேடுகளில் உள்ள கிராம கணக்குகள் இன்றுவரை பட்டாதாரர்களின் பெயரிலேயே உள்ளது. பல ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக உள்ள சொத்தினை அரசு நிலம் என கூறப்பட்டிருப்பது சிலருக்கு தெரியாமலே உள்ளது. அரசு கணினியில் ஏற்றப்பட்டபோது ஏற்பட்ட தவறை சரி செய்ய வருவாய்த்துறை முன்வரவில்லை. பாதிக்கப்பட்ட பயனாளிகள் வருவாய்த்துறையை அனுகினால் உடனே தீர்வு காணப்படாமல் பலமாதங்களாக அலைகழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.எனவே இக்குறைகளை களையும் பொருட்டு மாவட்டகலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் கணினிபட்டா, சிட்டா பதிவேற்றத்தில் ஏற்பட்ட பிழையை திருத்தம் செய்வதற்கு வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தில் ஆர்டிஓ தலைமையில் சிறப்பு முகாம் அமைத்து தர வேண்டும். அரசின் கவனக்குறைவால் ஏற்பட்ட குளறுபடிகளை மக்கள் பாதிக்காதவாறு தீர்வு காண வேண்டும். பாதிக்கப்ட்ட பொதுமக்களிடம் மனுவினை தனிதனியாக பெறுவதை தவிர்த்து ஒரே நாளில் அனைவரிடமும் மனுவினை பெற்று பொதுமக்களின் பணவிரயம் மற்றும் கால விரயத்தை தவிர்க வேண்டும் என கலெக்டருக்கு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: