உடனுக்குடன் கொள்முதல் செய்யாததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம்

திருவாரூர், பிப்.25: திருவாரூர் பிப்25 திருவாரூர் மாவட்டத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் நடப்பாண்டில்3 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்று அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இருப்பினும் விவசாயிகளின் நெல் மூட்டைகள் அரசு கொள்முதல் நிலையங்களில் உடனே கொள்முதல் செய்யப்படாமல் தேக்கம் அடைந்து வருகிறது. இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறுகையில், நடப்பாண்டில் போதுமான அளவில் விவசாயத்திற்கு நீர் கிடைத்த காரணத்தினால் காடு, மேடுகள் வரையில் அனைத்து பகுதிகளிலும் விவசாய பணிகள் நடைபெற்றன. மேலும் மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் சாகுபடி பணிகள் துவங்கப்பட்டு, ஒரே நேரத்தில் அறுவடை பணிகளும் நடைபெற்று வருவதால் ஒருசில இடங்களில் கொள்முதல் பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைந்து கொள்முதல் செய்வதற்கும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்களை லாரிகள் மூலம் கிடங்குகளுக்கு ஏற்றிச் செல்வதற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று முன்தினம் திருவாரூரில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் மாவட்டம் முழுவதும் நெல் மூட்டைகள் அரசு கொள்முதல் நிலையங்களில் தேக்கம் அடைந்து வருவதால் உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அதன் மாநில குழு உறுப்பினர் நாகராஜன் கூறுகையில்,

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது முழுவீச்சில் சம்பா அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ள நெல்மூட்டைகள் மாவட்டம் முழுவதும் பல நாட்களாக கொள்முதல் செய்யப்படாமல் கொள்முதல் நிலையத்தின் வாசலிலேயே தேக்கமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக நன்னிலம் பகுதியில் பல்வேறு கொள்முதல் நிலையங்களை கட்சியினர் ஆய்வு செய்தபோது இதேபோன்ற நிலை இருந்து வருகிறது. மேலும் கொள்முதல் செய்யப்படும் வரையில் அந்த நெல் மூட்டைகளை இரவு, பகலாக விவசாயிகள் பாதுகாக்கும் பரிதாபமான நிலையில் இருந்து வருவது மட்டுமின்றி நேற்று முன்தினம் காலையில் திடீரென பெய்த மிதமான மழையின் காரணமாக இந்த நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கு விவசாயிகள் பெரும்பாடுபட்டனர். மேலும் திடீரென பெய்த இந்த மழையின் காரணமாக உடனே தார்பாய்கள் கிடைக்காத நிலையில் பெரும்பாலான இடங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இந்த மூட்டைகளை காயவைத்த பின்னர்தான் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதனை காயவைக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். தற்போது நெல் மூட்டைகளை பிரித்து வெயிலில் காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பல நாட்கள் இரவு பகலாக கொள்முதல் நிலையங்களில் கார்த்திருந்து கிடப்பது மட்டுமின்றி தற்போது கொள்முதலுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நெல் மூட்டைகளை பிரித்து காயவைப்பது என பல்வேறு இடர்பாடுகளுக்கு ஆளாகி மன உளைச்சல் மற்றும் பொருளாதார இழப்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்வதுடன் அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனே அங்கிருந்து கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லவும் வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories: