தள்ளுவண்டி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசலின்றி சீரானது காந்தி மார்க்கெட்

திருச்சி, பிப். 25: திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளது. இங்கு பொருட்கள் வாங்குவதற்கு திருச்சி மட்டுமில்லாது பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து செல்வார்கள். மேலும் சில்லறை வியாபாரிகளும் வந்து செல்வதால் காந்தி மார்க்கெட் பகல், இரவு என எப்போது பரபரப்பாக காணப்படும். மேலும் இங்கு இரவு நேர காய்கறி கடைகளும் உள்ளது.இந்த கடைகளுக்கு பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கடைகளுக்கு பொருட்கள் இறக்குவதற்கான கால நேரத்தை போலீசார் நிர்ணயித்து அந்த நேரத்தில் வந்து ஏற்றி, இறக்க வேண்டும் என உத்தரவிட்டனர். ஆனாலும் ஒரு சில நேரங்களில் லாரிகளில் பொருட்களை ஏற்றி இறக்குவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில் காந்தி மார்க்கெட் ஆர்ச் முதல் மணி கூண்டு சாலையில் சாலையோரம் தரைக்கடைகள், தள்ளுவண்டிகளால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் பஸ்கள் வந்து திரும்ப முடியாமல் நெரிசலில் சிக்கி தவித்து வந்தது. இதனாலும் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பிலும் தன்னார்வ அமைப்பினரும் மாநகர கமிஷனருக்கு புகார் அளித்தனர். இதில் மாநகர கமிஷனர் வரதராஜூ உத்தரவின் பேரில் காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் காந்தி மார்க்கெட் சாலையோரம் இருந்த தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்தினர். மேலும் அங்கிருந்த தரைக்கடைகளை ஒழுங்குப்படுத்தி சாலையில் கயிறு மூலம் அடையாளம் ஏற்படுத்தி அதற்குள் தரைக்கடைகளை அமைத்துக்கொள்ள உத்தரவிட்டனர். இந்த நடவடிக்கையை அடுத்து தள்ளுவண்டி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டதால் எப்போதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பரபரப்பாக இருக்கும் காந்தி மார்க்கெட் தற்போது போக்குவரத்து நெரிசல் இன்றி பஸ் உள்ளிட்ட வாகனங்கள் எவ்வித இடையூறு இன்றி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கிறது. இதனால் பொதுமக்களும் நெரிசல் இன்றி சென்று வருகின்றனர்.

Related Stories: