குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திய மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்து விட்ட எஸ்ஐ

பெரம்பலூர், பிப். 25: குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் விட்ட மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்த பெரம்பலூர் ஆள்கடத்தல் சிறப்பு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளரை எஸ்பி நிஷா பார்த்திபன் பாராட்டினார். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை கிராமத்தை சேர்ந்த குமார் மகன் விக்ரம். குமார் இறந்து விட்டதால் குடும்ப சூழ்நிலை காரணமாக பத்தாம் வகுப்பு படிப்பை விக்ரம் பாதியில் நிறுத்தி விட்டு கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்த மாணவரை பற்றி காவலர் குழுமம் மூலம் பெரம்பலூர் மாவட்ட ஆள் கடத்தல் சிறப்பு தடுப்பு பிரிவு சப்.இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி கண்டுபிடித்தார்.

இதையடுத்து மாணவனிடம் கல்வியின் சிறப்பை எடுத்து கூறியும், மாணவனின் தாயிடம் விக்ரமின் வருங்காலத்தை பற்றியும் தெளிவாக எடுத்து கூறியும் மீண்டும் அந்த மாணவனை பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேர்த்து விட ஏற்பாடு செய்தார். சப்.இன்ஸ்பெக்டரின் இச்செயலை கேள்விப்பட்டு பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன், ஏடிஎஸ் பி கிரிதர், டிஎஸ்பி கென்னடி, பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட கல்வி அலுவலர் மாரிமீனாள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: