அரியலூரில் 201 ஊராட்சிகளில் இன்று கோமாரி நோய் தடுப்பு சிறப்பு கிராமசபை கூட்டம்

அரியலூர், பிப்.25: அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய் தடுப்பு முறைகள் மற்றும் கோமாரிநோய் தடுப்பூசி குறித்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட இன்று (25ம் தேதி) சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. முதல் சுற்று கால் நோய் மற்றும் வாய்நோய் (கோமாரி) தடுப்பூசிப்பணி, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து கிராமங்களிலும், அனைத்து தகுதியுள்ள மாட்டினங்களுக்கு வரும் 28ம்தேதி முதல் தொடர்ச்சியாக 21 நாட்களுக்கு நடைபெற உள்ளது. தகுதியுள்ள அனைத்து மாட்டினங்களுக்கு 100 சதவீத தடுப்பூசி மேற்கொள்வது உறுதி செய்யப்படுதல் வேண்டும்.

தடுப்பூசிப்பணி குறித்து விழிப்புணர்வு அனைத்து கால்நடை வளர்ப்போரிடம் ஏற்படுத்துதல் வேண்டும். கால்நடை வளர்ப்போர்கள் தங்களது மாட்டினங்களை தவறாமல் தடுப்பூசிப்போடும் இடத்திற்கு கொண்டு வந்து தடுப்பூசி போட அறிவிப்பு செய்தல் வேண்டும் எனவும், அந்தந்த பகுதிகளில் உள்ள பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கிராமசபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Related Stories: