பாபநாசம் கோரையாறு பகுதியில் யானைகள் அட்டகாசம்

வி.கே.புரம், பிப்.25:  பாபநாசம் கோரையாறு பகுதியில் தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தன.

வி.கே.புரம் டாணா பகுதியைச் சார்ந்தவர் சுப்பிரமணியன் (65). விவசாயியான இவருக்கு பாபநாசம் கோரையாறு ஆற்று பகுதியான அனவன்குடியிருப்பு பகுதியில் தென்னந்தோப்பும் வயலும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் இவரது தோட்டத்தில் 2 யானைகள் புகுந்து தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து நாசம் செய்துள்ளன. அப்போது வயலில் பணியில் ஈடுபட்டிருந்த சுப்பிரமணியன் யானைகளை கண்டதும் வெடி வெடித்தும், சைலன்சரை எடுத்து விட்டு டிராக்டரை இயக்கி சப்தம் எழுப்பியும் யானைகளை விரட்டி உள்ளார். தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் சோலார் மின்வேலிகளையும் உடைத்துள்ளன. இவர் துணிச்சலாக யானைகளை விரட்டியதால் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தப்பியது.

இதுகுறித்து சுப்பிரமணியன் கூறியதாவது, கடந்த 4 ஆண்டுகளாக யானைகள் தொடர்ந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதுவரை 295 தென்னை மரங்களை பிடுங்கி எறிந்துள்ளன. ஆனால் வனத்துறை ஆய்வு நடத்தி 115 தென்னை மரங்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கியது. அதிலும் ஒரு மரத்திற்கு ரூ400 மட்டுமே வழங்கப்பட்டது. ஒரு மரம் வளர்ப்பதற்கு விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரம் வரை செலவாகிறது. யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறையிடம் புகார் கொடுக்கும் சமயத்தில் மட்டும் வெடி போட்டு விரட்டுகின்றனர். ஆனால் யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு செல்லாமல் மீண்டும் விளைநிலங்களை தேடி வந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இந்த பிரச்னைக்கு வனத்துறையினர் நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என்றார்.

Related Stories: