காட்டு யானை தாக்கி விவசாயி வீடு சேதம்

கூடலூர், பிப்.25:  கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மண் வயல், ஓட கொல்லி பகுதியை சேர்ந்தவர் சந்திரன், விவசாயி. இவர் தனக்கு சொந்தமான காபி தோட்டத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரையால் வீடு கட்டி வசித்து வருகிறார். நேற்று அதிகாலை 3 மணியளவில் அப்பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை இவரது வீட்டை உடைத்து முற்றிலுமாக சேதப்படுத்தி உள்ளது. வீட்டின் உள்ளே கட்டிலில் படுத்து இருந்த சந்திரன் யானையை பார்த்ததும் வெளியில் ஓடியுள்ளார். இதில் கிழே விழுந்து காயம் அடைந்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து விவசாயிகள் ஓடி வந்து யானையை விரட்டி வனத்துறைக்கு தகவல் அளித்து சந்திரனை கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒற்றை காட்டு யானை ஒன்று இங்குள்ள ஓடக் கொல்லி, கோழிக் கண்டி,  கரிக்கனகொல்லி, குன்டித்தாள், தேன்கொல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றி வருகிறது.

இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சதாசிவம், கோபாலன் ஆகியோரது பாக்கு தோட்டம் மற்றும் பாகற்காய் தோட்டங்களையும் யானை சேதப்படுத்தி உள்ளது. இப்பகுதிகளை ஒட்டி வன எல்லையில் அமைக்கப்பட்டுள்ள அகழிகள் தூர்ந்து போய் உள்ளதால் காட்டு யானைகள் ஊருக்குள் வரத் துவங்கியுள்ளன. எனவே அகழியை ஆழப்படுத்தி மின் வேலி அமைத்து  விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். சம்பவ இடத்தில் வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் விசாரனை நடத்தி சென்றுள்ளனர்.

Related Stories: