தோகைமலை பகுதி சிவன்கோயில்களில் சிவராத்திரி, பிரதோஷ வழிபாடு

தோகைமலை, பிப்.25: தோகைமலை பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் மஹா சிவராத்திரியுடன் நடந்த மாசி மாத பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தோகைமலை அருகே ஆர்.டி.மலை பெரியநாயகி அம்பாள் சமேத விராச்சிலேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாள் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோயில் எதிரே உள்ள நந்தீஸ்வரருக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, மஞ்சள், கரும்புசாறு உட்பட அனைத்து வகை திரவியங்களால் சிறப்பு அபிசேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

கோயில் அர்ச்சகர் கந்த சுப்பிரமணிய சிவாச்சாரியார், வேதரத்தினசிவம் குருக்கள் ஆகியோர் பூஜைகளை வழி நடத்தினர். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இதேபோல் சின்னரெட்டியபட்டியில் உள்ள ஆவுடைலிங்கேஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், எடையபட்டி ரெத்தினகிரீஸ்வரர் கோயில்களிலும் மகா சிவராத்திரி மற்றும் பிரதோச விழா நடைபெற்றது.

Related Stories: