கரூர் முத்துலாடம்பட்டியில் கிணறு அருகே அங்கன்வாடி மையம்

கரூர், பிப். 25: கரூர் முத்துலாடம்பட்டியில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள அங்கன்வாடியை வேறு பகுதிக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட முத்துலாடம்பட்டியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினமும் இங்கு வந்து செல்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாகவே, இந்த அங்கன்வாடி மையம், பழமை வாய்ந்த குடிநீர் தொட்டியின் கீழ்ப்புற வளாகத்தில்தான் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், அங்கன்வாடி மையம் அருகிலேயே 60 அடி ஆழம் கொண்ட இரண்டு கிணறுகள் உள்ளன.

சிறு குழந்தைகள் பாதுகாப்பு கருதி கிணற்று பகுதிக்கு முன்பாக, முட்கள் போடப்பட்டிருந்தாலும், கிணறுகள் இரண்டும் அதிக ஆழம் உள்ளதால், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலைதான் நிலவி வருகிறது. இதன் காரணமாக, அங்கன்வாடி மையத்தில் பணியாற்றுபவர்கள், குழந்தைகளை வெளியே அனுப்பாமல் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. எந்த நேரமும் இதுபோல காவலுக்கு இருக்க முடியாத நிலையில், எந்த நேரமும் பிரச்னைக்கு வழி வகுக்கும் வகையில் இந்த அங்கன்வாடி மையத்தின் நிலை உள்ளது. குழந்தைகளின் பெற்றோர்களும் இதன் காரணமாக, அச்சமடைந்து உள்ளனர். பணியாளர்களும் அவதியில் உள்ளனர். இந்த நிலையை மாற்றும் வகையில், உடனடியாக இந்த அங்கன்வாடி மையத்தை வேறு கட்டிடத்துக்கு மாற்ற தேவையான ஏற்பாடுகளை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கன்வாடி மைய வளாகத்தையும், அருகில் திறந்த நிலையில் உள்ள கிணறுகளையும் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: