வடமதுரை அருகே பாராக இயங்கும் பயணிகள் நிழற்குடை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?

வேடசந்தூர், பிப். 25: வடமதுரை அருகே புதுப்பட்டி பிரிவில் குடிமகன்களின் கூடாரமாக மாறியுள்ள பயணிகள் நிழற்குடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது. வடமதுரை ஒன்றியம் காணப்பாடி ஊராட்சிக்குட்பட்டது புதுப்பட்டி பிரிவு. இங்குள்ள பயணிகள் நிழற்குடை தரைமட்டத்தில் இருந்து 2 அடி பள்ளத்தில் உள்ளது. இதனால் இதனை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உரிய பராமரிப்பு இல்லாததால் இந்த நிழற்குடை பாழடைந்து கிடக்கிறது. இதனை பயன்படுத்தி குடிமகன்கள், இதை திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர்.

இரவுநேரங்கள் மட்டுமின்றி பகலிலும் சரக்கு அடிக்க நிழற்குடை வந்து விடுகின்றனர். இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக பெண்கள், மாணவிகள் அச்சத்துடன் நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நலன் கருதி இந்த நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதுடன், குடிமகன்களின் வருகையையும் தடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: