இளையான்குடி அருகே 3 மாதமாக காவிரி குடிநீர் நிறுத்தம் *தவிக்கும் வல்லக்குளம் மக்கள் *தண்ணீருக்கு நீண்ட தூரம் பயணம்

இளையான்குடி, பிப்.25: கடந்த மூன்று மாதமாக காவிரி கூட்டு குடிநீர் வராததால், வல்லக்குளம் ஊராட்சி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இளையான்குடி ஒன்றியம் வல்லக்குளம் ஊராட்சியில் ஒச்சந்தட்டு, தோக்கனேந்தல், வல்லக்குளம், சாலியந்திடல், விஸ்வநாதபுரம், சூச்சனாங்குடி ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் கடந்த மூன்று மாதமாக காவிரி கூட்டு குடிநீர் நிறுத்தப்பட்டதால், அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கண்ணமங்கலம் நீரேற்ற தொட்டியிலிருந்து வரும் காவிரி கூட்டு குடிநீர், சாத்தணி வழியாக வல்லக்குளம் ஊராட்சியை கடந்து, கலங்காதான்கோட்டை நீரேற்ற தொட்டிக்கு வருகிறது. அவ்வாறு வரும் காவிரி கூட்டு குடிநீர் ஏன், வல்லக்குளம் ஊராட்சி சாலியந்திடல், விஸ்வநாதபுரத்திற்கு வருவதில்லை என, அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  கடந்த மூன்று மாதமாக காவிரி கூட்டு குடிநீர் வராததால், மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள அரண்மணைக்கரையில் வரும் காவிரி நீரை எடுத்து வருகின்றனர். மேலும் தாகத்தை தீர்ப்பதற்காக சிறுவயது முதல்,பெரியவர் வரை நடந்தே சென்று தலையில் சுமந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் தாகத்தை தீர்க்க வல்லக்குளம் ஊராட்சி மக்கள் கடும்  வாழ்கை போராட்டமே நடத்த வேண்டிய சூழலில் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பலமுறை காவிரி கூட்டு குடிநீர் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வல்லக்குளம் ஊராட்சி மட்டுமின்றி, பல பகுதிகளில் தனியார் குடிநீர் நிறுவனங்கள், தண்ணீரை ஒரு குடம் ரூ.10க்கு விற்பனை செய்கின்றனர். தினமும் விவசாய கூலி வேலைக்குச் சென்று, குடும்பத்தை காப்பாற்றும் இந்த மக்கள், ஒரு நாளைக்கு தண்ணீருக்கே சம்பாதிக்க வேண்டிய அவலநிலையில் உள்ளனர். அதனால் வல்லக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட, சாலியந்திடல், விஸ்வநாதபுரம், ஒச்சந்தட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு, காவிரி கூட்டு குடிநீர் தடையின்றி கிடைக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வல்லக்குளம் ஊராட்சி தலைவர் சரளாதேவி கூறுகையில், எங்கள் ஊராட்சியில் காவிரிநீர் வருவதில்லை. அதனால் பல கிலோ மீட்டர் தலையில் சுமந்து வரும் நிலை உள்ளது. எங்கள் ஊராட்சியை கடந்துதான் காவிரி பைப் லைன் செல்கிறது. ஆனால் இந்த பகுதிக்கு இணைப்பு தர, அதிகாரிகள் சாக்குபோக்கு சொல்கின்றனர். மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: