சிவகங்கை பகுதி பஸ்ஸ்டாப்களில் பயணிகளை பயமுறுத்தும் நிழற்குடைகள்

சிவகங்கை, பிப். 25: சிவகங்கை பகுதி பஸ்ஸ்டாப்களில் நிழற்குடைகள் வலுவிழந்து இருப்பதால் பயணிகள் நிற்கவே அச்சப்படுகின்றனர். எனவே புதிய நிழற்குடைகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிவகங்கை பகுதியில் கடந்த 1996ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட பிறகு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள பஸ்டாப்களில் பயணிகள் நிற்பதற்காக நிழற்குடை கட்டிடங்கள் கட்டப்பட்டது. 1997ம் ஆண்டிலிருந்து படிப்படியாக பல்வேறு ஆண்டுகளில் இக்கட்டிடங்கள் கட்டப்பட்டது. அதற்கு முன் முக்கியமான சில பஸ்நிறுத்தங்களில் மட்டும் நிழற்குடைகள் இருந்தன. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட பிறகு எம்பி நிதி, எம்எல்ஏ நிதி என உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களின் முயற்சியில் இந்த நிழற்குடைகள் கட்டப்பட்டது. இந்த நிழற்குடைகள் பெரும்பாலும் சிமெண்ட் கட்டிடங்களாகவே கட்டப்பட்டது. சில இடங்களில் மட்டுமே இரும்பு மற்றும் ஸ்டீல் கம்பிகளின் மூலம் புதிய வடிவில் கட்டப்பட்டது.

இந்நிலையில் சிமெண்ட் கட்டிடங்களாக உள்ள நிழற்குடைகள் வலுவிழந்து பெரும்பாலான இடங்களில் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளன. கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து உள்ளிருக்கும் இரும்பு கம்பிகள் நீட்டிய நிலையில் உள்ளன. அவ்வப்போது மேற்கூரையில் உள்ள கான்கிரீட் உடைந்து விழுகிறது. பல நிழற்குடைகளில் மேற்கூரையை தாங்கும் பில்லர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதுபோல் கடந்த 20, 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இரும்பு நிழற்குடைகள் அனைத்து இடங்களிலும் சேதமடைந்துள்ளன. மதுரை, தொண்டி சாலையில் கடந்த 2012ம் ஆண்டு முதல் சாலை விரிவாக்கப்பணிகள் நடந்தது. இதில் ஏற்கனவே இருந்த சாலை முற்றிலுமாக அகற்றப்பட்டு அதன் மீது மண், கற்கள், கான்க்ரீட் கலவை போடப்பட்டு உயரப்படுத்தப்பட்டது. இதனால் தரைப்பகுதிக்கும், சாலைக்கும் இடையே சில இடங்களில் அதிகபட்சமாக சுமார் 8 அடி உயரம் காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் ஏற்கனவே இருந்த நிழற்குடைகள் சாலையைவிட பல அடி பள்ளத்தில் உள்ளன.

மழை பெய்தால் அதில் நீர் நிறைவதால் மழை நேரத்தில் கூட இந்த நிழற்குடைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற ஆபத்தான நிழற்குடைகளில் பலவற்றை இடித்துள்ளனர். இங்கு புதிய நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பிரமுகர் ஒருவர் கூறியதாவது, ‘மழை மற்றும் வெயில் நேரங்களில் ஆபத்தான நிலையில் உள்ள நிழற்குடைகளில் நிற்கவே அச்சமாக உள்ளது. தற்போது ஏற்கனவே இருந்த நிழற்குடைகள் பல இடங்களில் இடிக்கப்பட்டுள்ளன. இடிக்கப்பட்ட இடங்களில் அப்படியே விட்டு விடாமல் புதிய நிழற்குடைகள் கட்ட வேண்டும். ஆபத்தான நிலையிலும், பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ள நிழற்குடைகளை அகற்றி அங்கும் புதிய நிழற்குடைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: