அரசு போக்குவரத்து கழக கிளைகளில் பணியாளர் பற்றாக்குறையால் பஸ்களை இயக்குவதில் சிக்கல் பொதுமக்கள் அவதி

போடி, பிப். 25: தேனி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கிளைகளில் பணியாளர் பற்றாக்குறையால், பஸ்களை முழுமையாக இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தேனி மாவட்டத்தில் போடி, தேவாரம், தேனி, பெரியகுளம், கம்பம் (2 கிளைகள்) லோயர்கேம்ப் என 7 அரசு போக் குவரத்து கழக கிளைகள் உள்ளன. இவைகள், திண்டுக்கல் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கிளைகள் மூலம் உள்ளூர் மற்றும் தொலைதூரத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் டிரைவர், கண்டக்டர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். தேனி மாவட்டத்தில் தேனி, போடி, பெரியகுளம் ஆண்டிபட்டி, சின்னமனூர், கம்பம் நகர் பகுதிகளுக்கும், அவைகளைச் சார்ந்த கிராமப்புறங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், மதுரை, திண்டுக்கல், திருச்சி, சென்னை, ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருச்செந்தூர், கோவில்பட்டி, ராஜபாளையம், விருதுநகர் நகரங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் பலர் ஓய்வு பெற்று வருகின்றனர். இதனால், பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டு, நகர் மற்றும் புறநகர்களுக்கு செல்கின்ற டிரிப்களில் தலா இரண்டு முறையாவது நிறுத்தப்படுகிறது. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர். மாவட்டம் முழுவது அரசு போக்குவரத்து கிளைகளில் பணியாளர் பற்றாக்குறை உள்ளது. இதனால், பல சமயங்களில் பஸ்கள் வராமல் பொதுமக்கள் ஆட்டோ பிடித்து செல்கின்றனர்.

எனவே, அரசு போக்குவரத்து கழக கிளைகளை பணியாளர் பற்றாக்குறையை போக்கி, பஸ்களை முழுமையாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..

Related Stories: