கலெக்சனை காரணம் காட்டி அரசு பஸ்களின் வழித்தடம் மாற்றம்

கம்பம், பிப். 25: கலெக்சனை காரணம் காட்டி கேரளாவுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்களை வழித்தடம் மாற்றி அனுப்புவதால், தோட்ட தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் ஏலம், மிளகு மற்றும் காப்பி விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்குள்ள தோட்டங்களுக்கு தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர், கம்பம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கேரளாவுக்கு செல்ல வசதியாக கம்பம் 1 கிளையிலிருந்து கட்டப்பனை, நெடுங்கண்டம், மேட்டுக்குழி, சாஸ்தாநடை ஆகிய ஊர்களுக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது இந்த பஸ்களை அடிக்கடி முன்னறிவிப்பின்றி நிறுத்தி திண்டுக்கல், மதுரை ஆகிய வழித்தடங்களுக்கு மாற்றி அனுப்புகின்றனர். இதனால் கம்பத்திலிருந்து கட்டப்பனை, நெடுங்கண்டம் செல்லும் தோட்டத்தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் தைப்பூசத்தை முன்னிட்டு இந்த பஸ்கள் பழனிக்கு சிறப்பு பஸ்களாக இயக்கப்பட்டன. மேலும், மகாசிவராத்திரியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாற்று வழித்தடத்தில் அனுப்பப்பட்டுள்ளன. நேற்று நான்காவது நாளாகவும் கட்டப்பனை, நெடுங்கண்டம், மேட்டுக்குழி, சாஸ்தாநடை ஆகிய ஊர்களுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள் செல்லவில்லை. இதனால் கம்பம் பஸ்நிலையத்தில், கேரளா செல்ல காத்திருந்த பொதுமக்களும், தோட்ட தொழிலாளர்களும் அதிக கட்டணம் கொடுத்து ஜீப்களில் சென்றனர்.

இது குறித்து தமிழக கூலித்தொழிலாளர்கள் கூறுகையில், ‘கேரளாவில் உள்ள ஏலத்தோட்டங்களில் தினசரி கூலி வேலைக்கு சென்று வருகிறோம். நாங்கள் ஏறிச் செல்லும் ஜீப் மற்றும் வேன்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதனால், தமிழக அரசு பஸ்களில் செல்வதை விரும்புகிறோம். ஆனால், கலெக்சனை காரணம் காட்டி முகூர்த்த நாட்கள், விழா நாட்களில் கேரளா செல்லும் பஸ்களை தமிழகத்தில் உள்ள முக்கிய ஊர்களுக்கு மாற்றி விடுகின்றனர். முன்னறிவிப்பில்லாமல் நிறுத்துவதால், அதிக கட்டணம் கொடுத்து ஜீப்களில் செல்கிறோம். இது குறித்து உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் நேற்று காலை கேட்டபோது, ‘பொதுமக்களின் வசதிக்காக உடனடியாக குறிப்பிட்ட பகுதிகளுக்கு பஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். நேற்று மாலை நான்கு மணி வரை கட்டப்பனை, நெடுங்கண்டம், மேட்டுக்குழி, சாஸ்தாநடை பஸ்சும் இயக்கப்படவில்லை’ என்றனர்.

Related Stories: