குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கம்பத்தில் 12வது நாளாக தொடரும் போராட்டம்

கம்பம், பிப். 25: குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கம்பத்தில் 12வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மத்திய அரசு கடந்தாண்டு டிச.11ம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக 70 நாட்களுக்கு மேலாக இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. மனிதச் சங்கிலி, கையெழுத்து இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், கண்டன பொதுக்கூட்டம் என பல வடிவங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தேனி மாவட்டம், கம்பத்தில் கடந்த பிப்.11ம் தேதி இரவு பாவலர் படிப்பகம் முன்பு, வாவா திடலில் டெல்லி ஜாமிஆ பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து, அப்பகுதி பொதுமக்களும், மாணவர்களும் போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து இந்த போராட்டம் 12வது நாளாக நேற்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டத்தில் பங்கு பெறும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Related Stories: