கொரோனா நோய் விசாரணைக்கு எங்களை அனுப்பி வைக்கக்கூடாது

விழுப்புரம், பிப். 25:  முற்றிலும் புதியதும், மிக அபாயகரமான கொரோனா நோய் விசாரணைக்கு எங்களை அனுப்பி வைக்கக்கூடாது என்று சுகாதாரஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை என்றும், ஒரு குழுஅமைத்து உரிய பயிற்சிஅளித்து அனுப்பிவைக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர். சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுகாதார ஆய்வாளர்கள் தினசரி அவர்களது வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தி உரிய அறிக்கை அளிக்கவேண்டுமென, சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், மிகவும் அபாயகரமான நோய் விசாரணைக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள், பயிற்சியில்லாமல் அனுப்பி வைப்பதாக சுகாதார ஆய்வாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விழுப்புரத்தில் நடந்த மாநில பொதுக்குழுவில், தமிழகஅரசின் இத்தகைய நடவடிக்கையை கைவிடவும், குழு அமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. மாநில தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வினோ முன்னிலை வகித்தார். மாவட்டத்தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், ஒரு துணை சுகாதாரநிலையத்திற்கு, ஒரு சுகாதார ஆய்வாளர் நியமனம் செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும், பிற மாநிலங்களில் உள்ள நடைமுறையை பின்பற்றிட வேண்டும். தொற்றுநோய் பணிகளுக்கு சுகாதார ஆய்வாளர்களைப் பொறுப்பாக்கும் போக்கை கைவிட வேண்டும். முற்றிலும் புதியதும், மிக அபாயகரமானதுமான கொரோனா நோய்விசாரணைக்கு உரிய பயிற்சி எதுவும் அளிக்காமல், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்காமலும் சுகாதார ஆய்வாளர்களை அனுப்பி அறிக்கை கோரும் போக்கினை கைவிடவேண்டும். வட்டார

மருத்துவ அலுவலர் தலைமையில் மருந்தாளுனர், செவிலியர், சுகாதாரமேற்பார்வையாளர், ஆய்வகநுட்புனர் அடங்கிய ஒரு குழுஅமைத்து, உரிய பயிற்சி வழங்கிடவேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி, வாகனத்தில் அனுப்பி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: