பாதுகாப்பில்லாத பள்ளி கட்டிடம் மாணவர்களின் கல்வி தரம் கேள்விக்குறி

கடலூர், பிப். 25:  கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வீரபெருமாநல்லூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிடங்கள் பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளதாக கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்கள் நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் முறையிட்டனர்.  கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்துக்கு உட்பட்ட வீரபெருமாநல்லூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த இப்பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் சுமார் 600 பேர் படித்து வருகின்றனர். வீர பெருமாநல்லூர், தேவனந்தல், பெரியப்பட்டு, செல்லப்பட்டு, ஈஸ்வரகண்டநல்லூர், பரவனந்தல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட அரசு பள்ளியில் படித்து பயன்பெற்று வருகின்றனர். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி என மூன்று மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளியில் மூன்று மாவட்ட மாணவர்களும் படித்து பயன்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பள்ளியின் பராமரிப்பற்ற தன்மையால் அங்குள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்து சில கட்டிடங்கள் பல ஆண்டுகாலமாக மூடி கிடப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.  பழுதடைந்த நிலையில் உள்ளதால் மாணவர்களுக்கு பயனற்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் வகுப்பறைகள் பள்ளி வளாகத்தின் மரத்தடியிலேயே பெரும்பான்மையான நாட்களில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இயற்கை சீற்றங்களின் பாதிப்பின் போது இதனால் படித்து பட்டம் வாங்க வேண்டிய மாணவர்களின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலையும் உருவாகி வருவதாக கூறுகின்றனர். இதற்கிடையே மாணவர்களின் கல்விக்கான வழிகாட்டியாக இருக்க வேண்டிய மாவட்ட கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் என அரசுத்துறைகளின் கவனத்திற்கு மாணவர்களின் பள்ளி கட்டிடம் தொடர்பான பாதிப்பை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் கிடப்பில் போடப்பட்டு வருகிறது. இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தலின் மூலம் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சியின் தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஜெயா ஆறுமுகம், ஜெயந்தி சிவா மற்றும் சமூக ஆர்வலர் கருணாமூர்த்தி, கிராம மக்கள் உள்ளிட்டவர்கள் கடலூரில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி சீரமைப்பு தொடர்பான மனுவை வழங்கினர். மேலும் கிராமத்தில் குளத்தை தூர் வாரவும் வலியுறுத்தினர்.

Related Stories: