திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு

திருவண்ணாமலை, பிப்.25: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர்கள், கந்துவட்டி கொடுமையிலிருந்து மீட்க கோரியும், நிலத்தை ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டுத்தர கோரியும் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள்குறை தீர்வு கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் டிஆர்ஓ ரத்தினசாமி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், கல்வி உதவித்தொகை, சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி, திருமண நிதியுதவி, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 610 மனுக்கள் பெறப்பட்டது.இதைத்தொடர்ந்து கலெக்டர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவகத்திற்கு நேரில் சென்று மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டார்.கூட்டத்தில், போளூர் தாலுகா திருசூர் கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதியர் குப்புசாமி(64), இவரது மனைவி மனோன்மணி(60) ஆகியோர் குறைதீர்வு கூட்டத்தில் தங்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மனு அளிக்க வந்தனர்.அப்போது, கலெக்டர் அலுவலக பின்பக்க வழியாக வந்த போது பின்பக்க நுழைவு வாயிலில் மனோன்மணி திடீரென தனது பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ைண கேனை எடுத்து தன் மீது ஊற்றினார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவரை மீட்டு உடனடியாக அவர் மீது தண்ணீர் ஊற்றி கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

அப்போது, அவர்கள் அளித்த மனுவில், ‘எனது நிலத்தின் அருகே துறை என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இவர் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து வந்தார். இதனால் வருவாய் துறை மூலம் நிலத்தை அளவீடு செய்து எனக்கு சேர வேண்டிய நிலம் வரை வரம்பு அமைக்கப்பட்டது.ஆனால் அதையும் மீறி தற்போது ஆக்கிரமித்து பயிரிட்டு வருகிறார். இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. இதனை தட்டிக்கேட்டால் எங்களை அடித்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே எங்கள் நிலத்தை ஆக்கிரமித்துள்ள நபரிடமிருந்து நிலத்தினை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தர்.இதேபோல், தண்டராம்பட்டு அருகே உள்ள போந்தை கிராமத்தை சேர்ந்த ரத்தினம்மாள்(61), தனது மருமகள், பேர குழந்தைகளுடன் கந்து வட்டி கொடுமையால் எனது நிலத்தையும், வீட்டையும் அபகரித்து கொண்டவர்களிடம் இருந்து மீட்டுத்தர கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர்கள் திடீரென அலுவலக நுழைவு வாயிலில் மண்ணெண்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், ரத்தினம்மாள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘எனது கணவர் கோவிந்தசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு எழுதபடிக்க தெரியாது.எனக்கு மோகன் என்ற ஒரு மகன் உள்ளார். இவருக்கு திருமனமாகி வசித்து வருகிறார். இந்நிலையில், வறுமையான குடும்ப சூழ்நிலையால் அவசர பணம் தேவை ஏற்பட்டது. இதனால் எங்கள் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரிடம் கடந்த 2014ம் ஆண்டு ₹1.50 லட்சம் கடனாக வாங்கினேன்.

பின்னர் 2மாதம் வட்டி தொகை வழங்கி வந்தேன். அதன் பின்னர் வட்டி கொடுக்க முடியாமல் போனதால், ஏழுமலை அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். இதனால் கொடுத்த பணத்திற்கு இரட்டிப்பு தொகை போட்டு ₹3 லட்சம் அக்ரிமென்ட் போட்டு கடந்த 2015ம் ஆண்டு எழுதி வாங்கிக்கொண்டார்.அப்போது, எனக்கு எழுத படிக்க தெரியாததை பயன்படுத்தி எனக்கு சொந்தமான வீடு மற்றும் நிலத்தை எழுதி பெற்றுக்கொண்டிருப்பது சில நாட்களுக்கு பின்னர் தெரியவந்தது. எனவே கந்துவட்டி கொடுமையிலிருந்து எங்களை மீட்டு, எங்களுக்கு சொந்தமான நிலம் மற்றும் வீட்டினை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.தண்டராம்பட்டு அடுத்த சேர்ப்பாபட்டு கிராமத்தில் தமிழக அரசு இலவச கறவை மாடு வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 50 பெண் பயனாளிகளுக்கு கறவை மாடு வழங்க அதிகாரிகள் ஒப்புதல் கையெழுத்துடன் எங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.ஆனால் இதுநாள் வரை எங்களுக்கு கறவை மாடு வழங்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தால் காலம் கடத்தி வருகின்றனர். எனவே கறவை மாடுகள் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.அதேபோல், பேராயம்பட்டு கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட உள்ள கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

Related Stories: