அணைக்கட்டு அடுத்த ஊசூரில் கோயில் அரச மரத்தில் இருந்து ரத்தம் வடிந்ததாக பரபரப்பு சிவப்பு நிற இலைகளை ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற மக்கள்

அணைக்கட்டு, பிப்.25: அணைக்கட்டு அடுத்த ஊசூரில் அம்மன் கோயில் பின்புறமுள்ள அரச மரத்தில் இருந்து ரத்தம் வடிந்ததாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.அணைக்கட்டு தாலுகா ஊசூர் கிராமத்தில் கெங்கையம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் பின்புறத்தில் நாகதேவதையம்மன் கற்சிலை அருகில் 100 ஆண்டு பழமையான அரச மரம் உள்ளது. இங்கு தினமும் விளக்கு ஏற்றி கிராம மக்கள் பூஜை செய்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக மரத்தின் மேல் உள்ள ஒரு கிளையில் இருந்து சிவப்பு நிரத்தில் ரத்தம் போன்று சொட்டு சொட்டாக நீர் வடிந்தது. காலை, மாலை நேரத்தில் மட்டுமே சொட்டு, சொட்டாக வடிந்து வந்ததால் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், நேற்று காலை மரத்தின் மேல் உள்ள கிளையில் இருந்து சொட்டு சொட்டாக ரத்தம் போன்று வடிந்துள்ளது. காலை நாகதேவதை கற்சிலையை சுத்தம் செய்ய அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அதனை பார்த்துள்ளார். தொடர்ந்து, அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி அவர்களும் வந்து பார்த்த போது சிறிது நேரம் சொட்டு, சொட்டாக ரத்த கறை போன்ற நிறத்தில் வடிந்து, சிறிது நேரத்தில் நின்றுவிட்டது. மேலும், கீழே உதிர்ந்து விழுந்திருந்த அரச மர இலைகளில் ரத்தக் கறை போன்று படிந்திருப்பதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்த தகவல் சுற்றுவட்டார பகுதியில் பரவியதையடுத்து ஊசூர் மற்றும் வெளியூர்களில் மக்கள் அங்கு வந்து பார்த்து செல்கின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘100 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள இந்த அரச மரத்தில் இருந்து இதுவரை பால், ரத்தம் வடிதல் போன்றவை நடந்ததில்லை, இன்று(நேற்று) தான் நாங்கள் பார்த்தோம், இலைகளில் படித்துள்ளவை சிகப்பு நிறத்தில் ரத்தம் போன்று திக்காக உள்ளது’ என்றனர். தகவலறிந்த விஏஓ தயாளன் மற்றும் வருவாய் துறையினர் அங்கு வந்த அரச மரத்தினை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.

Related Stories: