வேலூர் சிஎம்சி மருத்துவமனை முதல் கலெக்டர் அலுவலகம் வரை கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது

வேலூர், பிப்.25: வேலூர் சிஎம்சி மருத்துவமனை முதல் கலெக்டர் அலுவலகம் வரை கடைகளுக்கு முன்பு இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.வேலூர் மாநகராட்சியில் முக்கிய சாலையாக ஆற்காடு சாலை உள்ளது. சிஎம்சி மருத்துவமனை உள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். மேலும் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து ஆற்காடு, ராணிப்பேட்டை போன்ற பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த வழியாக இயக்கப்படுகிறது.மேலும் ஆட்டோக்கள் சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இதனால் இந்த வழியாக வரும் மற்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பலமுறை ஒருவழி பாதையாகவும், இருவழி பாதையாகவும் மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் நிரந்தரமாக போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியவில்லை.இந்நிலையில் சாலையின் ஒரு பகுதியில் சாலையை ஆக்கிரமித்தும், நடைபாதைகளுக்கு அமைக்கப்பட்ட பாதையும் ஆக்கிரமித்தும் தள்ளுவண்டி கடைகள், ஓட்டல்கள் என பல்வேறு கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தங்களது வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்திவிடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத வகையில் இருந்து வருகின்றது.

இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து காவல்துறையும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தனர்.அதன்படி, நேற்று வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள சிஎம்சி மருத்துவமனை எதிரே இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் போக்குவரத்து காவல்துறையும், மாநகராட்சி நிர்வாகமும் ஈடுபட்டது. அப்போது கடைகளின் முன்பு கட்டியிருந்த படிக்கட்டுகள், நடைபாதை மேடை போன்றவற்றை இடித்து அகற்றினர்.இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி கூறியதாவது:ஆற்காடு சாலையில் உள்ள கடைகளின் முன்பு நடைபாதைகளுக்கான வழியை ஆக்கிரமித்து நீண்ட வரிசையில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் சாலையில் வாகனங்கள் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவ்வழியாக செல்லும் மற்ற வாகனங்கள் எளிதில் கடந்து செல்ல முடியவில்லை.இதனால் நடைபாதைகளுக்கு என அமைக்கப்பட்டுள்ள சிறிய மேடை மற்றும் கடைகளில் படிக்கட்டுகளை இடித்து அகற்றும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணி 3 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிஎம்சி மருத்துவமனை முதல் கலெக்டர் அலுவலகம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அந்த பகுதியில் உள்ள இட முழுவதும் தார்ச்சாலை அமைக்கப்படும். பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: