பரங்கிமலை - பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டு உறுப்பினர்களின் பதவி 6 மாதத்துக்கு நீட்டிப்பு

ஆலந்தூர், பிப்,25: பரங்கிமலை - பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டு உறுப்பினர்களின் பதவி 6 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.பரங்கிமலை - பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டு பகுதி ராணுவ கட்டுபாட்டில் உள்ளது. இங்கு, 7 வார்டுகள் உள்ளன. இதில், பரங்கிமலை பகுதியில் 4 வார்டுகளும், பல்லாவரம் பகுதியில் 3 வார்டுகளும் உள்ளன.  இங்கு நடக்கும் தேர்தலில்  போர்டு தலைவராக ராணுவ அதிகாரியும், துணைத் தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்களை தேர்தல் நடத்தி பொதுமக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள்.இந்த போர்டுக்கான தேர்தல் கடந்த 2015 ஜனவரியில் நடந்தது.  இதில், போர்டு தலைவராக ராணுவ அதிகாரி பிரிகேடியர்  விக்ரம் சிங் அறிவிக்கப்பட்டார்.  துணை தலைவராக 2வது வார்டை சேர்ந்த  தேன்ராஜா, 1வது வார்டு ஜெயந்திமாலா,  3வது வார்டு குணசேகரன், 4வது வார்டு லாவண்யா, 5வது வார்டு ஆனந்தகுமார்,  7வது வார்டு சொக்கம்மாள் ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றனர். 6வது வார்டில் திமுக சார்பில் விஜயசங்கர்  வெற்றி  பெற்றார்.

இவர்களது பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதனையொட்டி,  பரங்கிமலை - பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டுக்கான தேர்தல்  ஏற்பாடுகள்  தொடங்கிய நிலையில்  மொத்தமுள்ள  7 வார்டுகளில்  4வது வார்டு எஸ்சி  பெண் வார்டாகவும்,  6வது வார்டு பெண் பொது வார்டாகவும் மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சகத்தின்  சார்பில்  ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், நிர்வாக காரணங்களால் பிப்ரவரியில் கன்டோன்மென்ட்  தேர்தல் நடத்த வாய்ப்பு  இல்லலை. அதனால்,  மேலும் 6 மாதத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: