திருமுல்லைவாயலில் வீட்டுமனைகளாக மாறி வரும் ஏரி: கழிவுநீரால் மாசடையும் தண்ணீர் அலட்சியத்தில் பொதுப்பணித்துறை

ஆவடி,: ஆவடி அருகே திருமுல்லைவாயலில் உள்ள அரபாத் ஏரி ஆக்கிரமிப்பு மற்றும் வீடுகளில் சேரும் கழிவு நீர் விடுவதால் கூவம் ஆறாக மாறிவருகின்றன. இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலையை ஒட்டி சுமார் 65 ஏக்கர் பரப்பளவிலான அரபாத் ஏரி உள்ளது. இதனை சுற்றி மணிகண்டபுரம், சரவணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு, இந்த ஏரி நீர் குடிநீராகவும் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்கியது. நாளடைவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியை பராமரிக்காததால் கழிவுநீர் கலந்த ஏரி நீர் குடிக்க பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பருவமழை பொய்தபோது, ஏரியை படிப்படியாக சமூகவிரோதிகள் ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்று விட்டனர். இதனை தடுக்காமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்த்தனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அரபாத் ஏரியின் பரப்பளவு சுமார் 20 ஏக்கர் வரை தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இந்த ஏரியின் நிலப்பகுதியை ஆக்கிரமித்து தனியார் மோட்டார் நிறுவனம், அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் என குடியிருப்பு பகுதியாக உருமாறி நிற்கிறது. எனவே, மழைக்காலத்தில் ஏரி உபரிநீர் வீடுகளில் புகுந்து விடுகிறது. இதனால், அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியிலேயே விடப்படுகிறது. இது தவிர, ஆவடி மாநகராட்சியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை ஒப்பந்த டேங்கர் லாரிகள் மூலம் எடுத்து அரபாத் ஏரிக்கு செல்லும் கால்வாயில் விடுகின்றனர்.

இந்த கழிவு நீரை ஏரியில் விடும் டேங்கர் லாரிகள் குறித்து சமூக ஆர்வலர்கள் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். ஆனாலும், போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், கழிவுநீர் கலந்து கூவம் ஆறு போல ஏரி மாறி வருகிறது. ஏரியை சுற்றியுள்ள வீடுகளின்  கிணறு, போர்வெல்களில் தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஏரி ஆக்கிரமிப்பை குறித்து சமூக ஆர்வலர்கள் அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 4ஆண்டுக்கு முன்பு ஏரி ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.  அதில், 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு அகற்ற தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஆக்கிரமிப்பை அகற்ற ஆக்கிரமிப்பாளர்களும் முன்வரவில்லை. அதன் பின்பு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அரபாத் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கழிவுநீர் விடுவதை தடுக்கவும், ஏரிக்கரையை சுற்றி நடைப்பாதை அமைத்து பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: