பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியில் புதிய கழிப்பறை கட்ட மரங்களை வெட்ட எதிர்ப்பு ஆணையர், பொறியாளரிடம் மனு காம்பவுண்ட் சுவர் கட்ட கோரிக்கை

விருதுநகர், பிப். 21: விருது நகர் பழைய பஸ் நிலைய வெளிப்பகுதியில் டூவீலர் நிறுத்துமிட நுழைவு வாசலில் கழிப்பறை கட்டுவதற்காக மரங்களை வெட்டுவதற்கு அனைத்து கட்சியினர் எதிர்ப்பு ஆணையர், பொறியாளரிடம் மனு அளித்தனர். விருதுநகர் பழைய பஸ் நிலையத்தின் வெளிப்புறம் சைக்கிள் ஸ்டாண்ட் வெளிப்பகுதியில் நகராட்சி சார்பில் நவீன சுகாதார வளாகம் கட்ட டெண்டர் விடப்பட்டது. டெண்டர் விடும்போது அனைத்து கட்சிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சியில் மனுக்கள் அளிக்கப்பட்டன. டெண்டர் எடுத்த ஒப்பந்த நிறுவனம் நேற்று காலை காலியிடத்தில் இருந்த மரங்களை வெட்டியது. இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளரிடம் அனைத்து கட்சியினர் மனு அளித்தனர். மனுவில், நகராட்சிக்கு உட்பட்ட பழைய பஸ் நிலையம், அண்ணாசிலை அருகில் நவீன கட்டண சுகாதார வளாகம் கட்டும் பணிக்கான பல ஆண்டுகள் வளர்ந்த மரங்கள் வெட்டப்படுகின்றன. சுகாதார வளாகம் கட்டும் இடத்திற்கு அருகில் அண்ணா சிலை உள்ளது. பஸ் நிலையத்தின் இருபுறமும் கழிப்பறைகள் உள்ளன.

நகரில் நவீன கட்டண சுகாதார வளாகம் கட்ட பல இடங்கள் இருக்கும் நிலையில் மக்கள் பயன்பாட்டு இடத்தை தடுக்கும் நோக்கமாக கருதுகிறோம். தற்போது திட்டமிட்டுள்ள இடத்தை தவிர்த்து வேறு இடத்தில் கட்ட வேண்டுமென தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் நகர செயலாளர் முருகன் தலைமையில் காங்கிரஸ் நகர செயலாளர் வெயில்முத்து, மார்க்சிஸ்ட் மாநில குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மதிமுக நகர செயலாளர் ராமர், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணை செயலாளர் பழனிக்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: