தேனி புதிய பஸ்நிலையத்தில் அம்மா குடிநீர் விற்பனை நிறுத்தம் பயணிகள் அவதி

தேனி, பிப். 21: தேனி புதிய பஸ்நிலையத்தில், தமிழக அரசின் அம்மா குடிநீர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேனியில் புதிய பஸ்நிலையம் நகரில் பைபாஸ் ரோட்டில் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேனிக்கும், தேனி வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும், தேனி புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையத்தில் சுமார் 50க்கும் அதிகமான வணிக கடைகள் உள்ளன. இக்கடைகளில் தனியார் நிறுவன குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், தமிழக அரசின் அம்மா குடிநீர் பாட்டில்கள் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மூலம், பஸ்நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டது. ரூ.10க்கு விற்கப்படும் இந்த குடிநீர் பாட்டில்களை பயணிகள் வாங்கி வந்தனர்.

இந்நிலையில், நகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. தனியார் கடைகளில் குடிநீர் பாட்டில்களின் விலை அதிகம் என்பதால் பயணிகள் அம்மா குடிநீர் பாட்டில்களை வாங்கி வந்தனர். இந்நிலையில், புதிய பஸ் நிலையத்தில் அரசு குடிநீர் விநியோகத்தை போக்குவரத்து கழகம் நிறத்தியுள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் ஏழை, எளியவர்கள் அதிக விலை கொடுத்து குடிநீர் பாட்டில் வாங்கும் நிலை உள்ளது. இதை தவிர்க்க மீண்டும் அரசு குடிநீர் விற்பனை செய்யவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: