வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு பிரிவு

சிவகங்கை, பிப்.21: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உறுப்பு நலன் குன்றிய மாற்றுத்திறனாளி மனுதாரர்களின் மனுக்கள் மட்டுமே வேலைவாய்ப்புக்காக சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு வந்தன. கண்பார்வையற்ற, காது கேளாத, வாய்பேச முடியாத மனுதாரர்கள் சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதிகளை பதிவு செய்து வந்தனர்.

இச்சிறப்பு பிரிவு சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலேயே தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கண்பார்வையற்ற, காதுகேளாத, வாய்பேசமுடியாத பதிவுதாரர்கள் சென்னைக்கு செல்வதை தவிர்த்து சிவகங்கையிலேயே பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், அரசுத்துறைகளால் அறிவிக்கப்படும் காலியிடங்களுக்கு அனைத்து வகை மாற்றுத்திறனாளி மனுதாரர்களை பரிந்துரை செய்தல், தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களை பணியமர்த்தல், மத்திய, மாநில அரசால் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கு மாற்றுத்திறனாளி மனுதாரர்களை அதிக அளவில் பங்கேற்க செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துதல் உள்ளிட்ட பணிகள் இப்பிரிவின் மூலம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பிரிவின் பணிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: