நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

மதுரை, பிப். 21: நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழகத்திலுள்ள பெரும்பாலான நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. பல இடங்களில் வரத்து கால்வாய்களே இல்லை. தண்ணீர் தேக்க முடியாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. எனவே, நீதிமன்றம் தலையிட்டு பட்டா இல்லாத எந்த நிலங்களையும் பதிவு செய்யக் கூடாது. ஆக்கிரமிப்பு நிலங்களில் மின் இணைப்பு வழங்கக் கூடாது. ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ளாட்சி அமைப்புகள் வரைபட அனுமதி வழங்கக் கூடாது. ஏற்கனவே அனுமதி வழங்கிய பகுதியில் குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கக்கூடாது. இந்தப் பகுதியில் பட்டா வழங்கக்கூடாது. அரசின் எந்த சலுகையும் வழங்கக்கூடாது என தொடரப்பட்ட வழக்கில் கடந்தாண்டு ஐகோர்ட் உத்தரவிட்டது.அதில், வருவாய் ஆவணங்களில் நீர்நிலைகள் என குறிப்பிட்ட இடங்களை பதிவு செய்யக் கூடாது.

நீர்நிலைகளில் கட்டுமானங்களுக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கக் கூடாது. கட்டிட வரைபட அனுமதி தரக் கூடாது. நீர்நிலை குடியிருப்புகளில் உள்ளோரை வாக்காளர்களாக சேர்க்க கூடாது என உத்தரவிட்டது. ஆனால், ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தமிழக தலைமை செயலர், வருவாய்துறை முதன்மை செயலர், ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலர், பதிவுத்துறை செயலர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர்கள் மற்றும் டிஆர்ஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழுள்ள நீர் நிலைகள் வகைபடுத்தப்பட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு ஒத்துழைக்காமல் மெத்தனமாக இருக்கும் அதிகாரிகள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: