ஆத்தூர் நகராட்சி பகுதியில் 77 கிலோ பிளாஸ்டிக் கேரிபேக்குகள் பறிமுதல்

ஆத்தூர், பிப்.21: ஆத்தூர் நகராட்சி பகுதியில் செயல்படும் கடைகளில், நகராட்சி அலுவலர்கள் 77கிலோ பிளாஸ்டிக் கேரிபேக்குகளை பறிமுதல் செய்து, ₹18ஆயிரம் அபராதம் வசூலித்தனர். ஆத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், டீக்கடை, ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்தப்படுவதாக, நகராட்சி ஆணையாளர் ஸ்ரீதேவிக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து நேற்று நகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி தலைமையில், சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் உள்ளிட்ட துப்புரவு பிரிவு ஊழியர்கள் காந்திநகர், பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகள், ஹோட்டல்கள் டீக்கடைகளில் திடீர் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக், டம்ளர் உள்ளிட்ட பொருட்களை வியாபாரிகள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. இதனையடுத்து வியாபாரிகளிடமிருந்து, 77 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் ₹18 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தும் வியாபாரிகளுக்கு அதிகபட்ச அபராத தொகை விதிக்கப்படுவதோடு, அவருடைய உரிமம் முற்றிலும் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories: