குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய பெண்கள் 4வது நாளாக போராட்டம்

சேலம், பிப்.21: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, சேலத்தில் நேற்று 4வது நாளாக இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், மாநிலம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, சேலம் கோட்டை மேல்தெரு பள்ளிவாசல் பகுதியில் கடந்த 17ம் தேதி முதல் இஸ்லாமிய பெண்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும், சென்னை போராட்டத்தில் தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை, தங்களது காத்திருப்பு போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அவரகள் அறிவித்துள்ளனர். நேற்று (20ம் தேதி) 4வது நாளாக இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: