தர்மபுரி நகராட்சிக்கு ₹14 கோடி வரி பாக்கி அரசுத்துறைகளிடம் பல லட்சம் நிலுவையை வசூலிக்க தீவிரம்

தர்மபுரி, பிப்.21:  தர்மபுரி நகராட்சியில் வரும் மார்ச் மாதத்திற்குள் ₹14 கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்து, தீவிர வசூலிப்பில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அரசுத்துறைகள் பல லட்சம் நிலுவை வைத்துள்ள நிலையில், அதன வசூலிக்க நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 68595 பேர் வசிக்கின்றனர். தர்மபுரி நகராட்சியின் ஆண்டு வருமானம் ₹14 கோடி ஆகும். இதனைக் கொண்டு நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. சமீப காலமாக நகராட்சியில் வரி வசூலிப்பு நிலுவை அதிகம் உள்ளது. புதியதாக பொறுப்பேற்ற நகராட்சி ஆணையர் சித்ரா, வரி வசூலிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். வரும் மார்ச் மாதத்திற்குள் ₹14 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளார். அரசுத்துறை அலுவலகங்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி அதிகம் உள்ளது. இதனால், ஊழியர்களுக்கு சம்பளம் போடுவது சிரமமாக உள்ளது. பொதுப்பணித்துறை கட்டிடத்தில் இயங்கும் அரசு அலுவலகங்கள் சொத்து வரி, குடிநீர் வரி பாக்கி அதிகம் வைத்துள்ளன.

தர்மபுரி நகரம் மற்றும் புறநகர் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம்- பணிமனைகள் இதுவரை சொத்து வரியாக ₹33 லட்சத்து 25 ஆயிரத்து 257ம், குடிநீர் வரியாக ₹48 ஆயிரத்து 324ம் நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது. தர்மபுரி பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு துறை ₹27 லட்சத்து 66 ஆயிரத்து 562 சொத்து வரியும், குடிநீர் வரியாக ₹16 ஆயிரத்து 980ம் பாக்கி வைத்துள்ளது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ₹30 லட்சமும், குடிநீர் வரியாக ₹18 ஆயிரத்து 120ம் நகராட்சிக்கு செலுத்த வேண்டியது நிலுவை வைத்துள்ளது.  கோட்டை கோயில் செயல் அலுவலர் ₹1.50 லட்சமும், தர்மபுரி நகர காவல்நிலையம், நகர காவலர் குடியிருப்பு, பழைய போலீஸ் ஸ்டேஷன், டிஎஸ்பி ஆபீஸ், மகளிர் காவல் நிலையம் என சேர்த்து மொத்தம் தர்மபுரி எஸ்பி ஆபீஸ் சொத்துவரியாக ₹5.50 லட்சமும், குடிநீர் கட்டணமாக ₹85,933ம் நகராட்சிக்கு செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது. தர்மபுரி வட்டார கல்வி அலுவலர் சொத்துவரியாக ₹2 லட்சமும், குடிநீர் வரியாக ₹23 ஆயிரத்து 808ம் நகராட்சிக்கு செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது. தர்மபுரி ஆவின் நிர்வாகம் ₹1.20 லட்சமும், பத்திரப்பதிவு அலுவலகம் ₹33,813 வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளது. அரசு அலுவலகங்களே முறையாக வரி செலுத்தாமல் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தர்மபுரி நகராட்சி நிர்வாகம் போதிய வருவாய் இல்லாமல் தள்ளாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி நகராட்சி நிர்வாகம் ₹14 கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை வசூல் செய்து முடிக்கும்வரை நகராட்சி ஊழியர்கள், பணியாளர்களுக்கு விடுமுறை கிடையாது. உடல்நலம் குறைவு அல்லது அவசர விடுமுறை மட்டுமே வழங்கப்படும். வரும் மார்ச் மாதம் வரை விடுமுறை நாட்களிலும் வரி வசூலிப்பு உண்டு. சிறப்பு முகாமும் நடக்கும். வரி செலுத்தாத அரசு அலுவலகங்களில் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.

Related Stories: