இ-சேவை மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை விநியோகம் திடீரென நிறுத்தம்

தர்மபுரி, பிப்.21:  தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 13ம் தேதி  இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, இறுதி வாக்களர் பட்டியல் வெளியிடப்பட்டது. 5 தொகுதிகளிலும் புதிய வாக்காளர்களாக 31 ஆயிரத்து 164 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டை இ- சேவை மையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இ-சேவை மையத்திற்கு சென்று வாக்காளர் அடையாள அட்டை கேட்டால் தற்காலிகமாக வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர். ஆனால், மக்களுக்கு இது தெரியாமல் தினசரி மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் கேட்டு திரும்பிச் செல்லும் அவல நிலை உள்ளது. தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உளள இ-சேவை மையங்களில் மட்டும் தினசரி 20 பேர் வந்து கேட்டு செல்கின்றனர்.  இதுகுறித்து இ-சேவை மையத்தில் பணியாற்றும் நிர்வாகிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் கடந்த ஒரு வாரமாக மக்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டை, பெயர், முகவரி மாற்றம் செய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. வாக்காளர் அடையாள அட்டை போதிய அளவில் இருப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது. இதனால், மக்களுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது,’ என்றனர்.

Related Stories: