நீலகிரி மாவட்டத்தில் 100 பசுமை வீடுகள் கட்ட நடவடிக்கை அமைச்சர் வேலுமணி பேரவையில் தகவல்

ஊட்டி,  பிப். 21: நீலகிரி மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 100  பசுமை வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வேலுமணி  தெரிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற கூட்டம் நடந்து வரும் நிலையில்,  கேள்வி நேரத்தின் போது, ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ் (காங்.,) பேசுகையில்,  நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த மழையின்போது பல இடங்களில்  பெரிய அளவிலான பேரிடர்கள் ஏற்பட்டது. மேலும், ஏழை எளிய தாழ்த்தப்பட்ட  மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் குடியிருப்புக்கு  அருகே மண் சரிவுகள் ஏற்பட்டு  பாதிக்கப்பட்டது. இதனை ஆய்வு மேற்கொண்டு தமிழக துணை முதல்வர்  பன்னீர்செல்வம், உடனடியாக 100 பசுமை வீடுகள் கட்டித்தர நடவடிக்கை  எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது, என்றார்.

இதற்கு  பதில் அளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, ஊட்டி எம்.எல்.ஏ.,  கணேஷ், ஊட்டியில் உள்ள மத்திய பஸ் நிலையத்தை சீரமைக்க வேண்டும் என  முதல்வரிடம் கேட்டுக் கொண்டதன் பேரில், உடனடியாக பஸ் நிலையம் சீரமைப்பு  பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பஸ் நிலையம் சீரமைக்கப்பட்டது.  அதேபோன்று, பேரிடர் சமயங்களில் ஏற்படும் பாதிப்புக்களை சீரமைப்பதற்காக  ஒதுக்கீடு செய்யப்படும் மத்திய, மாநில அரசுகளின் நிதியை கொண்டு நீலகிரி  மாவட்டத்தில் 100 பசுமை வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும் என்றார். ஊட்டி எம்.எல்.ஏ. கணேஷின் கோரிக்கையை அமைச்சர்  ஏற்றுக் கொண்டதால், 100 பசுமை வீடுகள் புதிதாக வரக்கூடும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: