முன்மாதிரியான 4 கிராமங்களுக்கு 984 மண்வள அட்டை வினியோகம்

ஊட்டி, பிப். 21: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மண்வள அட்டை தினம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தோட்டக்கலை தகவல் மையத்தில் நடைபெற்றது. விழாவில், மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி ராஜா மண்வள பாதுகாப்பு குறித்து பேசினார். தொடர்ந்து மண் ஆய்வுக்கூட உதவி இயக்குநர் தலைமை வகித்து பேசுகையில், ‘‘தேசிய நீடித்த நிலையான வேளாண்மை திட்டம், மாவட்டத்தில் கடந்த 2015ம் ஆண்டு முதல் இரு பருவங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. புவிசார் துணைக்கோள் உதவியுடன் மண் மாதிரிகள் மாவட்டத்தில் பல இடங்களிலும் எடுக்கப்பட்டு ஆய்வு செய்து மண் வள அட்டைகள் வழங்கப்பட்டது. அதன்படி, இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் ஆண்டு 5 ஆயிரத்து 825 மண் மாதிரிகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 30 ஆயிரத்து 430 மண் வள அட்டைகள் வழங்கப்பட்டது.  2016-17ம் ஆண்டுகளில் 5 ஆயிரத்து 52 மண் மாதிரிகள் ஆய்வு செய்து 38 ஆயிரத்து 625 மண் வள அட்டை வழங்கப்பட்டன.  

2017-18ம் ஆண்டு 3 ஆயிரத்து 750 மண் மாதிரிகளும் ஆய்வு செய்து 38 ஆயிரத்து 421 மண்வள அட்டைகள் வழங்கப்பட்டது. 2018-19ம் ஆண்டில் 3 ஆயிரத்து 867 மண் மாதிரிகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 31 ஆயிரத்து 879 மண் வள அட்டைகள் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் மண் மாதிரி கிராமத்திட்டத்தின் கீழ் நஞ்சநாடு, உபதலை, கொனவக்கரை மற்றும் பாடந்தொரை ஆகிய நான்கு கிராமங்கள் முன் மாதரி கிராமங்களாக தெரிவு செய்யப்பட்டு மண் ஆய்விற்கு பின் 984 மண் வள அட்டைகள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் முன் மாதிரி கிராம திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டத்திலும் 5 வருவாய் கிராமங்கள் முன்மாதிரி கிராமங்களாக தேர்வு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தபடவுள்ளது, என்றார்.

இவ்விழாவில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: