மகா சிவராத்திரியை முன்னிட்டு சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை உயர்வு

சத்தியமங்கலம், பிப்.21: மகாசிவராத்திரியை முன்னிட்டு சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் நல்ல விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் மல்லி, முல்லை, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலத்தில் விவசாயிகளால் நடத்தப்படும் பூ மார்க்கெட்டில் ஏல முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுவதால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்தது. மல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் அதிக விலைக்கு விற்பனையானது. கடந்த வாரம் கிலோ ரூ.500க்கு விற்பனையான மல்லி நேற்று கிலோ ரூ.1,260க்கு விற்பனையானது. இதேபோல், சம்பங்கி கடந்த வாரம் கிலோ ரூ.30க்கு விற்பனையான நிலையில் நேற்று ரூ.130 க்கு விற்பனையானது. இன்று இரவு சிவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதால் பூக்கள் விலை மேலும் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இதேபோல், முல்லை கிலோ ரூ.880க்கும், செண்டுமல்லி ரூ.50க்கும் விற்பனையானது.

Related Stories: