காரைக்கால் அருகே குடியுரிமை சட்டத்தை கண்டித்து பொதுக்கூட்டம்

காரைக்கால், பிப்.21: காரைக்கால் அருகே குடியுரிமை சட்டத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.

மத்திய பாஜக அரசின் குடியுரிமை சட்டத்தை கண்டித்தும் அச்சட்டத்தை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், கருக்கன்குடி குடியுரிமை சட்ட எதிர்ப்புக் போராட்டக்குழு சார்பாக, காரைக்கால் கருக்கன்குடி கிராமத்தில், கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கருக்கன்குடி முத்தவல்லிகள் சபை தலைவர் அமீர் ஹம்ஜா தலைமை வகித்தார். கருக்கன்குடி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக்குழுவின் ஊடக பிரிவை சேர்ந்த ராஜா முஹம்மது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கருக்கன்குடி பள்ளிவாசல் இமாம் ஜாபர் சாதிக் துவக்க உரையாற்றினார். தொடர்ந்து, புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், தோப்புத்துறை ஜாமீஆ மஸ்ஜித் தலைமை இமாம் அல்ஹாபிழ் ஷாஹுல் ஹமீது, திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர், மத்திய மதவாத பாஜக அரசு கொண்டு வந்துள்ள மக்களுக்கு எதிரான குடியுரிமை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும், இச்சட்டங்களை அமுல்படுத்த காரண கர்த்தாக்களாக இருந்த மோடி மற்றும் அமித்ஷா வை கண்டித்தும் பேசினர்.

பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் தன் தலைமையிலான ஆட்சியே போனாலும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என சூளுரைத்தது மட்டுமல்லாமல், அதனை சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி தீர்மானமாக நிறைவேற்றிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், இத்தீர்மானத்தை ஆதரித்து சட்டமன்றத்தில் வாக்களித்து தீர்மானத்தை வெற்றி பெற செய்த புதுச்சேரி மாநில காங்கிரஸ் - திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: