கலெக்டர் தகவல் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றம்

வேதாரண்யம்,பிப். 21: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய மாமுனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி கொடுத்த ஸ்தலம். வேதங்கள் பூஜை செய்து மூடி கிடந்த கதவை அப்பரும், சம்மந்தரும் தேவாரம் பாடி திறந்ததாக வரலாறு சிறப்புமிக்க கோயில். ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மாசிமக பெருவிழாவில் தியாகராஜர் தேரில் எழுந்தருளி வீதியுலா காட்சியும், அப்பரும் சம்மந்தரும் தேவார திருப்பதிகங்கள் பாடி மூடி கிடந்த கதவை திறக்கும் வரலாற்று நிகழ்ச்சியும், கல்யாணசுந்தரர் எழுந்தருளி தெப்பதிருவிழாவும், மாசிமகத்தன்று வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி சன்னதி கடலில் தீர்த்தவாரி முக்கிய திருவிழாவாகும்.

இந்த மாசிமக பெருவிழாவையொட்டி கொடியேற்று விழா நடைபெற்றது. கோயிலில் மரகத தோரணவாயில் முன்பு உள்ள கொடி மரத்தின் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதி மேளதாள வாத்தியங்கள் முழங்க கொடியேற்று விழா நடைபெற்றது. பின்பு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் யாழ்பாணம் வரணீ ஆதினம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி கோயில் நிர்வாக அதிகாரி மாரியப்பன், குருகுலம் அறங்காவலர் கேடிலியப்பன் மற்றும் உபயதாரரகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: