மனித உடலிலுள்ள திசுக்கழிவுகளை அகற்றி முதிர்ச்சியை தாமதப்படுத்துகிறது திராட்சை

திருச்சி, பிப். 20: திராட்சை சாப்பிடுவதால் மனித உடலிலுள்ள திசுக்கழிவுகள் அகற்றப்பட்டு உடல் முதிர்ச்சி அடைவது தாமதப்படுத்தப்படுகிறது என பன்னாட்டு விஞ்ஞானி பிரகாஷ் கூறினார். சர்வதேச திராட்சை வல்லுநர் பிரகாஷ் திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட திராட்சை ரகங்கள் பல்வேறு மண் வகை உள்ள தோட்டங்களில் பயிர் செய்யப்படுகிறது. உதாரணமாக பெங்களூருவில் நீலம் அனாபி ஷாகி ரகங்கள் தலா 15 சதவீதமும் சரத் மற்றும் குலோபி ரகங்கள் தலா 5 சதவீதமும் சாகுபடி பரப்பில் பயிர் செய்யப்படுகின்றது. திராட்சையில் உரமிடுதல், நீர்ப்பாசனம், பயிர் பாதுகாப்பு கவாத்து செய்தால், சரியான நேரத்தில் சரியான முறையில் அறுவடை செய்தல், பக்குவப்படுத்துதல், சேமிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் சாகுபடி முறைகளை கையாளுவதால் இந்திய திராட்சை சாகுபடியாளர்கள் ஏற்றுமதி வர்த்தகத்தில் தங்களுடைய வருமானத்தை பெருக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. கடந்த 2018-19ம் ஆண்டு இந்தியா ரூ.2,335 கோடி (ரூ.3,350 லட்சம் அமெரிக்க டாலர்கள்) மதிப்புள்ள 2.5 லட்சம் மெட்ரிக் டன்கள் திராட்சையை ஏற்றுமதி செய்கின்றது. இங்கிலாந்து, நெதர்லாந்த, ரஷ்யா, பங்களாதேஷ், ஜப்பன், ஜெர்மனி, இந்தியாவில் முக்கிய ஏற்றுமதி சந்தைகள். மகாராஷ்டிரா, மாநிலத்திலுள்ள நாசிக் முக்கிய திராட்சை ஏற்றுமதி மையம். மகாராஷ்டிரா விவசாயிகள் “மகா கிரேப்ஸ்” என்ற உழவர் உற்பத்தியாளர், கம்பெனி மூலம் இது சாத்தியப்படுகிறது.

இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 81 சதவீதம் திராட்சை உற்பத்தி செய்யப்படுகிறது. இதை தவிர கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, தமிழகம், பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. தில்குஷ் ரக திராட்சை சாகுபடி செய்யும் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.7 லட்சம் வருமானம் பெற முடிகிறது. ெகாட்டை ரகமான ெரட் குலோப் ரகம் ஏக்கருக்கு 8 முதல் 10 டன்கள் வரை மகசூல் அளித்து 1 கிலோவிற்கு ரூ.130 விலை பெற்று தருகிறது என்றார்.மேலும் அவர் கூறுகையில், திராட்சை சாப்பிடுவதால் மனித உடலிலுள்ள திசு கழிவுகள் அகற்றப்பட்டு உடல் முதிர்ச்சி அடைவது தாமதப்படுத்தபடுகிறது.

திராட்சை விதை பொடியை உட்கொள்வது சிறந்த புற்றுநோய் மருந்து. சந்தையில் பொடியின் விலை கிராமுக்கு ரூ.4,000. இந்தியாவில் தகுந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் திராட்சை சாகுபடிக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. இவ்வாறு பிரகாஷ் பேசினார்.நிகழ்ச்சியில் தோட்டக்கலை மற்றும் வேளாண் கல்லூரி முதல்வர் மாசிலாமணி, பழத்துறைத் தலைவர் பார்த்திபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: