ஆத்தூர் நகராட்சி பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆத்தூர், பிப்.20: ஆத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் இருத்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. ஆத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களில் கடைக்காரர்கள், நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் என பலரும் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வந்தனர். இதனால், நகர பகுதியில் போக்குவரத்து மிகுந்த நெரிசல் ஏற்பட்டு வந்தது. நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும், அதிக அளவிலான பகுதிகளை ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் மற்றும் மேற்கூரைகள் அமைக்கப்பட்டு இருந்ததால், பொதுமக்கள் சாலையில் நடக்கவும், வாகனங்கள் செல்வதிலும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தன. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக சேவை அமைப்பினரும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் மனுக்களை தொடர்ந்து அளித்து வந்தனர். இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களையும் போக்குவரத்து இடையூறாக ஆக்கிரமித்து கடைகள் மற்றும் கூரைகள் அமைத்துள்ளவர்கள் அதனை அகற்ற வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.  இந்நிலையில், நேற்று காலை நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளையும், மேற்கூரைகளையும் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். பெரும்பாலான வர்த்தகர்கள் தங்களின் கடைகளுக்கு முன்பு ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கூரைகளையும், திட்டுகளையும் அவர்களாகவே அகற்றி கொண்டனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினால் பாதிக்கப்பட்ட நடைபாதை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் கூறுகையில், ‘அன்றாடம் பிழைப்பு நடத்தும் எங்களுக்கு நிரந்தரமான ஒரு இடத்தை வழங்க அரசுத்துறை அதிகாரிகளும், நகராட்சி அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: