கொண்டப்பநாயனப்பள்ளியில் தமிழக விவசாயிகள் சங்க கிளை துவக்கம்

கிருஷ்ணகிரி, பிப்.20: பர்கூர் அருகே கொண்டப்பநாயனப்பள்ளி கிராமத்தில், தமிழக விவசாயிகள் சங்க கிளை துவக்க விழா நடந்தது.  விழாவிற்கு, மாவட்ட தலைவர் நசீர்அகமத் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாலமுருகன், செயலாளர் ராஜா, பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் பாலச்சந்திரன் வரவேற்றார். மாநில தலைவர் ராமகவுண்டர் பங்கேற்று, புதிய கிளையினை துவக்கி வைத்து பேசினார். பின்னர் நடந்த கூட்டத்தில், கொண்டப்பநாயனப்பள்ளி கிராமத்திற்கு தினமும் குடிநீர் வழங்க வேண்டும். கால்நடை மருத்துவமனை மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைக்கவேண்டும். சாலையை அகலப்படுத்தி, புதுப்பிக்க வேண்டும். ஆழ்துளை கிணற்றின் மூலம் விவசாயம் செய்யபவர்களுக்கு 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அரசு செலவில் அமைத்து தர வேண்டும். வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ₹50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்டட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: