நிலத்தை அளந்து தராததால் பட்டா வழங்கிய இடத்தில் குடியேறும் போராட்டம்

தர்மபுரி, பிப்.20:  தர்மபுரி அருகே, இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தை அளந்து தராததால், பயனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தினர்.   தர்மபுரி மாவட்டம், சோகத்தூர் ஊராட்சி ஆட்டுக்காரம்பட்டியில்,  தனியார் நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறை கையகப்படுத்தி, ஆதிதிராவிடர் இன மக்கள் 115 பேருக்கு, கடந்த 1998ம் ஆண்டு இலவச பட்டா வழங்கியது. இந்நிலையில் நேற்று, தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தில், பயனாளிகள் ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் முருகன், தலைவர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் குடியேறும் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலறிந்த தாசில்தார் சுகுமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்

அப்போது பயனாளிகள் கூறுகையில், ‘கடந்த 1998ம் ஆண்டு எங்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. ஆனால், 25 ஆண்டுகளாகியும் அந்த நிலத்தை, அதிகாாிகள் அளவீடு செய்து தரவில்லை. இதுதொடர்பாக பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும், இந்த நிலம் எங்களுக்கே சொந்தம் என தீர்ப்பு வந்துள்ளது. ஆனால், இதுவரை நிலத்தை அளவீடு செய்து தரவில்லை.  எங்களது நிலத்தை அளந்து காண்பிக்கும் வரை, இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம்,’ என்றனர்.இந்த போராட்டத்தில் ஆதிதமிழர் பேரவையை சேர்ந்த செல்வவில்லாளன், விடுதலை செல்வன், வீரசிவா, ராதாகிருஷ்ணன், கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: