ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு ₹12.39 கோடியில் நவீன மருத்துவ உபகரணங்கள்

நாகர்கோவில், பிப்.20: ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு ₹12 கோடியே 39 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் ஜப்பான் நிதி உதவியுடன் வர உள்ளது. இதற்காக கட்டிடங்கள் ஆய்வு நேற்று நடைபெற்றது.ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என்று கடந்த 2018ம் ஆண்டு, நாகர்கோவிலில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். அதன்படி தற்போது இதற்கான பணிகளை, தமிழ்நாடு நகர்ப்புற மருத்துவ மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஜிகாஅமைப்பின் (Japan International Cooperation Agency) உதவியுடன்  செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.  முதற்கட்டமாக இந்த திட்டத்தின் கீழ் ₹12 கோடியே 39 லட்சத்து 50 ஆயிரம் செலவில் நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட உள்ளன. இதில் மயக்கவியல் துறைக்கு ₹1.50 கோடி, இருதய சிகிச்சை பிரிவுக்கு ₹1.33 கோடி, வயிறு, குடல் மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு ₹1.25 கோடி, காது, மூக்கு, தொண்டை பிரிவுக்கு ₹1.86 கோடி, வயிறு, குடல் மருத்துவ அறுவை சிகிச்சை பிரிவுக்கு ₹1 கோடியே 67 லட்சத்து 50 ஆயிரம், சிறுநீரகவியல் துறைக்கு ₹65 லட்சம், சிறுநீரக நீர்ப்பாதையியல் துறை ₹2.26 கோடி, கதிரியியக்கவியல் துறைக்கு ₹1.37 கோடி மற்றும் கண் மருத்துவ பிரிவுக்கு ₹50 லட்சம் என சுமார் ₹12 கோடியே 39 லட்சம் செலவில் அந்தந்த துறைகளுக்கான மருத்துவ நவீன உபகரணங்கள் வர உள்ளன.

இந்த உபகரணங்களை வைப்பதற்கான இட வசதிகள் இந்த மருத்துவக்கல்லூரியில் அமைந்துள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்ய சென்னையில் இருந்து பொறியாளர் குழுவினர் நேற்று, ஆசாரிபள்ளத்தில் உள்ள குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி மற்றும் டாக்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட இந்த குழுவினர், குமரி மருத்துவக்கல்லூரியில் உள்ள கட்டிடங்களை பார்வையிட்டனர். நவீன உபகரணங்கள் வந்தால் செயல்படுத்துவதற்கான கட்டிட வசதிகள் இங்கு உள்ளதா?  அந்த கட்டிடங்கள் பாதுகாப்பானதாக அமைந்து உள்ளதா? என்பதை ஆய்வு செய்தனர். தீவிர சிகிச்சை பிரிவு, புற நோயாளிகள் பிரிவு, பொது மருத்துவ பிரிவு உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர். ஜிகா திட்டத்தின், குமரி மருத்துவக்கல்லூரி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரின்ஸ் பயஸ் இந்த குழுவினருடன் சென்றார். இந்த ஆய்வுக்குழு அளிக்கும் அறிக்கையில் அடிப்படையில், நவீன உபகரணங்களுக்கான வசதிகள் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவ உபகரணங்கள் வந்து சேரும் என தெரிகிறது. குமரி மருத்துவக்கல்லூரிக்கு குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரம் நோயாளிகள் வருகிறார்கள். 700 பேர் உள் நோயாளிகளாக உள்ளனர். தற்போது பெரும்பாலான மருத்துவ தேவைக்காக, குமரி மாவட்ட மக்கள் திருவனந்தபுரத்துக்கு தான் அதிகம் செல்கிறார்கள். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்காக தகுதி பெறும் போது, கூடுதல் சிகிச்சைகள் குமரி மருத்துவக்கல்லூரியில் கிடைக்க வாய்ப்பு உண்டு என டாக்டர்கள் கூறினர்.

Related Stories: