அறுவடை நேரத்தில் சோகம் எரிந்து சாம்பலான 12 ஏக்கர் கரும்பு தோட்டம்: செங்கல்பட்டு அருகே பரபரப்பு

செங்கல்பட்டு, ஜன.29: செங்கல்பட்டு அருகே, கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 12 ஏக்கர் கரும்பு தோட்டம் எரிந்து சாம்பலானது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு அடுத்த உதயம்பாக்கம்  கிராமத்தை சேர்ந்தவர் செந்தில், விவசாயி. இவருக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிர் செய்திருந்தார். அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பை கடந்த 3 நாட்களாக அறுவடை செய்து  சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை சுமார் 6 மணியளவில், 2 ஏக்கர் நிலத்தில் இருந்த கரும்புகளை வெட்டிய பின், அறுவடை செய்யும் இயந்திரத்தை அடுத்த நிலத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது, மேலே சென்ற உயர் அழுத்த மின்வயரில் உரசி திடீரென கரும்பு தோட்டத்தில் தீப்பற்றியது. பின்னர், தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியது. இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை.

தகவலறிந்து செங்கல்பட்டு தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, கரும்பு தோட்டத்தில் பரவிய தீயை அணைக்க முயன்றனர். மாலை நேரம் என்பதாலும்,  காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும் தீ மளமளவென தோட்டம் முழுவதும் பரவியது. ஆனாலும், வீரர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி  தீயை அணைத்தனர். அதற்குள், தோட்டத்தில் இருந்த 12 ஏக்கர் கரும்புகள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. இதைதொடர்ந்து வேளாண் துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், சர்க்கரை ஆலை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், முன்னாள் மணப்பாக்கம் ஊராட்சி தலைவர் துரைராஜ் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து விவசாயி செந்தில் கூறுகையில், மின்கசிவு காரணமாக கரும்பு தோட்டத்தில் தீ பரவி முழுவதும் எரிந்து நாசமானது. ஆண்டு முழுவதும் பாதுகாப்பு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டு கரும்பு தோட்டம் எரிந்து நாசமானது பெரும் வேதனையாக உள்ளது. இதனை  அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புகாரின்படி செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: