வாலாஜாபாத் ஒன்றியம் ஒழையூர் ஊராட்சியில் இடிந்து விழும் அபாய நிலையில் இருளர் மக்களின் தொகுப்பு வீடுகள்: புதிதாக கட்டித்தர வலியுறுத்தல்

வாலாஜாபாத், ஜன.29: வாலாஜாபாத் ஒன்றியம் ஒழையூர் ஊராட்சியில், இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள இருளர் மக்களின் தொகுப்பு வீடுகளை அகற்றி விட்டு, அரசு சார்பில் புதிதாக வீடுகளை கட்டித்தர வேண்டும் என இருளர் மக்கள் வலியுறுத்துகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் ஒழையூர் ஊராட்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதே ஊராட்சியில் நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த ஊராட்சியில் ஏரிக் கரையை ஒட்டி இருளர் இன மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு சார்பில், 6 தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன. இந்த 6 தொகுப்பு வீடுகளிலும், சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை உள்ளாட்சி பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும் இங்கு வசிக்கும் மக்களும், ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து இங்கு வசிக்கும் இருளர் இன மக்கள் கூறுகையில், வாலாஜாபாத் ஒன்றியம் ஒழையூர் ஊராட்சியில் நாங்கள் வசிக்கிறோம். எங்களின் பிரதான வேலை வேர் பிடுங்குவது, மரம் வெட்டுவது, அதுமட்டுமின்றி அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை செய்வது என பிழைத்து வருகிறோம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 6 குடும்பங்களாக இருந்த நாங்கள் தற்போது 12 குடும்பங்களாக அதிகரித்துவிட்டோம்.

இருக்க இடமின்றி ஆங்காங்கே குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகிறோம். இந்த சூழ்நிலையில் எங்களுக்கு தமிழக அரசு மூலம் கட்டி தரப்பட்ட தொகுப்பு வீடுகளின் சுவர்களில் சிமென்ட் பூச்சுகள் பெயந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் வாழ்கிறோம். மழை காலங்களில், மழைநீர் அருவிபோல் வீடுகளில் ஒழுகுகிறது. மேலும், மேல் தளங்களும் அடிக்கடி இடிந்து  விழுந்து இந்த தொகுப்பு வீடுகளில் வசிக்க முடியாத அவல நிலையில் தள்ளப்பட்டுள்ளோம்.

இதில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தமிழக அரசின் பசுமை வீடுகள் அல்லது மத்திய அரசின் வீடுகளோ எங்களுக்கு வழங்கி புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: