மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் 121 அதிநவீன சிசிடிவி கேமரா: கமிஷனர் தொடங்கி வைத்தார்

ஆலந்தூர்: கிண்டியில் இருந்து போரூர் வரை செல்லும் மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், பாதுகாப்பு நலன் கருதியும் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 121 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி, நந்தம்பாக்கம் காவல் நிலையம் எதிரேயுள்ள மைதானத்தில் நேற்று நடந்தது. கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தலைமை வகித்தார். இணை கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் பிரபாகரன், நந்தம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துகொண்டு, புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை இயங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், “சென்னை மாநகரம் முழுவதும் இதுவரை இரண்டரை லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது இப்பகுதியில் தனியார் நிறுவனங்கள் உதவியுடன் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 121 நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதுடன், குற்றவாளிகளை பிடிக்க உதவியாக இருக்கும். சமீபத்தில், சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட குழந்தை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராவால் சென்னையில் 50 சதவீத குற்றங்கள் குறைந்துள்ளது” என்றார்.

Related Stories: