மாட்டு வண்டியில் மணல் எடுப்பவர்களுக்கும் ஆன்லைனில் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்: ஜனநாயக தொழிற்சங்கம் வலியுறுத்தல்

சென்னை: மாட்டுவண்டியில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதால், அந்த தொழிலை நம்பி உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். ஜனநாயக தொழிற்சங்க மைய கடலூர் மாவட்ட தலைவர் ராமர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கடலூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட மாட்டு வண்டியில் மணல் எடுப்பதை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.

இந்த மாட்டு வண்டி மணல் அள்ளுவதற்கு கடந்த 2019ம் முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், லாரிகள், டிராக்டர்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு தான் வருகிறது. மாட்டு வண்டியால் மணல் அள்ளுவதால் நீராதாரம் கெட்டு விடப்போவதில்லை. எனவே, வேலைவாய்ப்பற்ற இந்த நிலையில், விவசாயிகளையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளுவதற்கு அனுமதி தர வேண்டும். மணல் குவாரிகள் மூடப்பட்ட நிலையில் இன்றைக்கு நமது மணல் வெளி மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாங்கள் தேவைக்கு மட்டும் தான் மணல் எடுக்க போகிறோம்.

மாநிலத்துக்குள் மட்டும் தான் மணல் அள்ளி விற்பனை செய்யப்போகிறோம். இதனால், எந்தவிதபாதிப்பும் இருக்காது. எனவே, எங்களை மணல் அள்ள அனுமதிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் மணல் கொடுப்பதை நாங்கள் ஏற்று கொள்கிறோம். எங்களுக்கும் ஆன்லைன் மூலம் மணல் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். மாட்டு வண்டியில் மணல் அள்ளி விற்பனை செய்வது விவசாயிகள் தான். அப்படிபட்ட விவசாயிகள் பலர் இந்த தொழிலில் ஈடுபடுவதால் அவர்களை ஒழுங்குபடுத்தும் விதமாக ஒழுங்குமுறை சட்டம் ஒன்றை அரசு இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: