அனைத்து முதல்நிலை தேர்வையும் ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும்

திருச்சி, ஜன.29: அனைத்து முதல்நிலைத் தேர்வையும் ஆன்லைன் மூலமாக நடத்த வேண்டும் என்று என்ஆர் ஐஏஎஸ் அகாடமி இயக்குனர் விஜயாலயன் கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த செப்.1ம் தேதி இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட 6491 பணியிடங்களுக்கு முதலில் அறிவிக்கப்பட்டு பிறகு 3000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகளின்படி, முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் மீது வாழ்நாள் தடை விதிக்கப்பட்டதை நாங்கள் மகிழ்வுடன் வரவேற்கிறோம். அரசு வேலையை எதிர்நோக்கியிருக்கும் இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய டிஎன்பிஎஸ்சி இதுபோன்ற நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்.

மேலும் இதில் பாதிக்கப்பட்ட தேர்வர்களின் சார்பாக சில கோரிக்கைகளையும் நாங்கள் முன் வைக்கின்றோம். குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் எக்காரணம் கொண்டும் எந்த அரசுப் பதவிகளுக்கும் வந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த வேண்டுகின்றோம். இந்த வழக்கு தொடர்பான விசாரணை முழுவதுமாக முடிந்து அறிக்கை வெளியிடும் வரையில் தேர்வர்களுக்கான கலந்தாய்வு மற்றும் பணி நியமன ஆணை ஆகியவற்றை நிறுத்தி வைக்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அனைத்து முதல்நிலைத் தேர்வையும் ஆன்லைன் மூலமாக நடத்த வேண்டும்.

முதன்மைத் தேர்வுகளையும் கொள்குறி வடிவில் நடத்த வேண்டும். பழைய முறைப்படி குரூப்-2 ஏ மற்றும் குரூப்-2 நேர்முகத்தேர்வு ஆகியவற்றைத் தனித்தனியே நடத்த வேண்டும். குரூப்-2 தேர்வு முறைக்கான கருத்துக்கணிப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதன் முடிவுகளை விரைவாக வெளியிட்டால் அதற்குத் தயார் செய்யும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விடைத்தாளில் விடைகளைக் குறிப்பதற்கான பந்துமுனைப் பேனாவையும் அரசே வழங்கினால் இதுபோன்ற முறைகேடுகள் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது. சமீபத்தில் முறைகேடு நடைபெற்ற பாலிடெக்னிக் டிஆர்பி தேர்வு மற்றும் 2012ம் ஆண்டு வினாத்தாள் முன்னதாக வெளியிடப்பட்ட குரூப்-2 தேர்வு ஆகியவை ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டது போல் இந்த தேர்வையும் ரத்து செய்ய வேண்டும். சமீபத்தில் குரூப்-4 விசாரணையைப் போல் இதற்கு முன்பு நடைபெற்ற குரூப்-1 தேர்விலும் குற்றச் செயல்கள் நடைபெற்றனவா என்பதை விசாரித்துப் பிறகு நியமன ஆணை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு விஜயாலயன் தெரிவித்தார்.

Related Stories: